தமிழகம்

அரசுத் துறைகளில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில் 41 காலி இடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அரசு துறை​களில் 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலிப்​பணி​யிடங்​கள் உள்ள நிலை​யில், வெறும் 41 காலி​யிடங்​களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டிருப்​பது டிஎன்​பிஎஸ்சி தேர்​வர்​களை அதிர்ச்​சிக்கு உள்​ளாக்​கி​யுள்​ளது.

ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்​பினை டிஎன்​பிஎஸ்சி நேற்று முன்​தினம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-2 பதவி​களில் 41 காலி​யிடங்​களும், குரூப்-2 ஏ பதவி​களில் 780 காலி​யிடங்​களும் இடம்​பெற்​றுள்​ளன. குரூப்-2 பதவி​களில் இடம்​பெற்​றுள்ள உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சார்​-ப​தி​வாளர், துணை வணிக வரி அதி​காரி, தலை​மைச் செயலக உதவி பிரிவு அலு​வலர் உள்பட 14 வித​மான பதவி​களி​லும் காலி​யிடங்​களின் எண்​ணிக்கை ஒற்றை இலக்​கத்​தில்​தான் உள்​ளன.

அரசு துறை​களில் 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலிப்​பணி​யிடங்​கள் உள்ள சூழலில் வெறும் 41 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக டிஎன்​பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டிருப்​பது அவர்​களை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதுகுறித்து டிஎன்​பிஎஸ்சி தேர்​வர்​கள் கூறிய​தாவது:

அரசு துறை​களில் லட்​சக்​கணக்​கான காலி​யிடங்​கள் இருப்​ப​தாக அரசு ஊழியர் சங்​கங்​கள் கூறுகின்​றன. ஊழியர்​கள் பற்​றாக்​குறை காரண​மாக, மூன்று நான்கு பேர் செய்​யக்​கூடிய அலு​வல்​களை ஒரே ஊழியர் செய்ய வேண்​டி​யுள்​ளது. இதனால், அரசு ஊழியர்​களுக்கு பணிச்​சுமை அதி​கரித்​துள்​ளது.

முதல்​வருக்கு வேண்​டு​கோள்

அரசு துறை​களில் உள்ள அனைத்து காலிப்​பணி​யிடங்​களும் விரைந்து நிரப்​பப்​படும் என தவெக தேர்​தல் வாக்​குறுதி அளித்​திருந்​தது. அதன் அடிப்​படை​யில், அதிக எண்​ணிக்​கையி​லான தேர்​வர்​கள் எழுதக்​கூடிய குரூப்-4 , குரூப்-2 தேர்​வு​களுக்கு காலிப்​பணி​யிடங்​கள் அதி​கம் நிரப்பப்படும் என எதிர்​பார்த்​தோம்.

ஆனால், எங்​கள் நம்​பிக்​கைக்கு நேர் மாறாக குரூப்-2 தேர்வு மூலம் வெறும் 41 காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது. ஒருங்​கிணைந்த குரூப்-2 தேர்​வு மூலம் குறைந்​த​பட்​சம் 2 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​புவதற்கு அறி​விப்பு வெளி​யாகும் என எதிர்​பார்த்​தோம். ஆனால், குரூப்-2 தேர்வு மூலம் 41 காலி​யிடங்​களும், குரூப்-2 ஏ தேர்வு மூலம் 780 காலி​யிடங்​களும் என இரு தேர்​வு​களும் சேர்த்து 821 பணி​யிடங்​கள்​தான் நிரப்​பப்பட உள்​ளன.

சாதா​ரண​மாக குரூப்-2 தேர்​வுக்கு சுமார் 8 லட்​சம் பேர் விண்ணப்பிக்​கிறார்​கள். இத்​தனை பேர் விண்​ணப்​பிக்​கக்​கூடிய தேர்​வுக்கு வெறும் 41 காலி​யிடங்​களே அறிவிக்​கப்​பட்​டிருப்​பது எங்​களுக்கு மிகுந்த ஏமாற்​ற​மாக இருக்​கிறது. எனவே, குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்வு மூலம் கூடு​தல் பணி​யிடங்​களை நிரப்ப தமிழக முதல்​வர் ஆணை​யிட வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யத்​தின் மாநில தலை​வர் த.அமிர்​தகு​மார் கூறும்​போது, "தமிழக அரசு பணி​யில் அனைத்து வகை பதவி​களை​யும் சேர்த்​தால் ஏறத்​தாழ நான்​கரை லட்​சம் காலிப்​பணி​யிடங்​கள் வரும்.

நிதிச்​செல​வினங்​களை குறைக்​கும் நோக்​கில் காலி​யிடங்​கள் காண்​பிக்​கப்​படு​வது இல்​லை. லட்​சக்​கணக்​கானோர் எழுதும் தேர்​வுக்கு குறைந்த காலிப்​பணி​யிடங்​கள் அறிவிக்​கப்​படும்​போது, அது கடும் போட்​டியை ஏற்​படுத்​தும். இரண்டு மூன்று முறை தேர்​வெழுதி பணி கிடைக்​காத இளைஞர்​களுக்கு தாழ்​வு மனப்​பான்மை ஏற்​பட்டு அவர்​கள் தங்​களுக்கு அரசு பணி கிடைக்​காது என்ற நிலைக்கு வந்​து​விடு​வார்​கள். அரசு துறை​களில் காலி​யிடங்​கள் அதி​களவு இருப்​ப​தால் குரூப்-2 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களின்​ எண்​ணிக்​கை​யை அதி​கரிக்​க அரசு முன்​வர வேண்​டும்​" என்​றார்​.

SCROLL FOR NEXT