எப்போதும் போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிறந்த முறையில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வை நடத்தி முடித்துள்ளது. அநேகமாக எங்கும் யாரும் குறை கூற முடியாத அளவுக்கு நன்கு திறம்பட நடத்தியுள்ள தேர்வாணையம் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துகள்.
எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும் - குரூப் ஒன் முதல் நிலை தேர்வு வினாத்தாள், மன்னிக்கவும், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச நடப்புகள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டது, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இடம் பெறாதது, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் புறக்கணிக்கப் பட்டது, சமூகம் - கலை - விளையாட்டுத் துறைச் செய்திகளை மிக மேலோட்டமாகக் கையாண்டது... இது குரூப் 1க்கான தேர்வு என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
ஓரிரு வினாக்கள் தவிர்த்து, பெரும்பாலான கேள்விகள், ‘எப்போதோ’ தயாரிக்கப்பட்டது போல் தெரிகிறது. கேள்வி கேட்பதில் ஏன் இத்தனை வறட்சி...? புரியவே இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், மத்திய மாநில அரசுத் திட்டங்கள், இந்திய வரலாறு, தமிழக அரசியல், தமிழ் இலக்கியப் பகுதிகள்.. வழக்கம் போல் கணிசமான அளவில் இடம் பெற்றுள்ளன. பழகிய தேர்வர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும்.
மொழிபெயர்ப்பு - அயற்சி தருகிறது. மிக உறுதியாய், தமிழ் மொழி இத்தனை கடினமானது அல்ல. எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, மொழிபெயர்ப்பு வாசகங்கள் சில - நம் வாசகருக்காக: ‘டிஜிட்டல் உலர் தாவரத் தொகுப்புத் தரவுத் தளங்கள் வகைப்பட்டியல் குறிப்புகள்’, ‘ஒரு மாதிரியின் வரலாற்றுச் சேகரிப்புத் தேதி’ ‘சார்பின்றி தனித்து ஒதுங்கும் கேமீட்டுகளை உள்ளிடுகின்றன’.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இடம் பெறுகின்ற இந்த மொழிபெயர்ப்புகள் அரசின் ‘அங்கீகாரம்’ பெற்றவை தானா..? ஒரு சில தேர்வர்கள் அவர்களுக்கு தோன்றியதை எழுதினால் அது எப்படி பொதுவான மொழிபெயர்ப்பு ஆகும்..?
அதேசமயம், ‘கமென்சலிசம்’ ‘மியுக்காலிஸம்’, ‘அமென்சலிஸம்’ - என்று ஆங்கிலச் சொற்கள் அப்படியே தமிழ் எழுத்துகளில்! இது தொடர்பாக ஆணையம் சற்றே கூடுதல் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். அரசமைப்பு சட்ட 42வது திருத்தம், 104வது திருத்தம், நாடாளுமன்றத்தில் பண மசோதா தாக்கல், ஆளுநரின் அதிகாரங்கள், கூட்டாட்சித் தத்துவம், நெருக்கடி நிலை செயல்பாடு, ‘லோக்பால்’, ‘லோக் அயுக்தா’, ‘யுபிஎஸ்சி’, தகவல் உரிமைச் சட்டம், சாதிவாரிக் கணக்கெடுப்பு ‘எச்ச அதிகாரங்கள்’ (‘மிச்ச அதிகாரங்கள்’ - இன்னும் நன்றாக இல்லையா?) மீதான கேள்விகள், மனநிறைவைத் தருகின்றன.
இயற்கை வேளாண்மை, வைக்கோல் புரட்சி, தேசிய பசுமை இல்ல வாயு வெளியேற்றம், நானோ யூரியா தொடர்பான வினாக்கள் உண்மையில் மெச்சும் படி இருந்தன. பாராட்டுகள். கூட்டு வட்டி, தனிநபர் வருமானம், சராசரி, உண்மைக் கூற்றுகள் உள்ளிட்ட கேள்விகள் வழக்கமான முறையில், சுமாராக இருந்தாலும், பெரிதாகக் குறை சொல்ல ஏதும் இல்லை.
இரும்புத்தாது, ‘மேக்னைட்’, நைட்ரேட், பாதரச நோய்கள், நாசா ஆய்வகம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், பொருநை அகழாய்வு, வேலூர் கிளர்ச்சி தொடர்பான வினாக்கள் - எதிர்பார்த்தவைதான் என்றாலும், வரவேற்கத் தக்கன. வினாத்தாளின் தரம் பெரிதும் சரிந்து போனதற்குக் காரணமான வினாக்கள், எண்ணிக்கையில் மிக அதிகம்.
அதிகம் அறியப்படாத ஒரு விருதுக்கான பரிசுத் தொகை எவ்வளவு, ‘இவ்வாறு பாராட்டப்படுபவர்’ யார், அந்தக் காலத்திலேயே அதிகம் வாசிக்கப்படாத இதழ்களின் பெயர்கள், ஆசிரியர்கள்...
பத்துக்கும் மேற்பட்ட வினாக்களில் ‘ஆண்டுகள்’, ‘கால வரிசை’, தனி நபர்களை உயர்த்திப் பிடிக்கும் புகழுரைகள்... மன்னிக்கவும், குரூப் 1 பணிக்கான தேர்வுக்கு உகந்தவை அல்ல.
புதுமையான சுவாரஸ்யம் மிக்க கேள்வி என்று எதுவும் தென்படவில்லை. மாறிவரும் உலக அறிவுச் சூழல், பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு,போட்டித் தேர்வு வினாத்தாள்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தைத் தேர்வாணையம் உணர்ந்து செயல்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
பொதுவாகச் சொல்கிறோம் - ஒரு குறிப்பிட்ட அரசியல் கலாச்சாரத்தை வலியுறுத்தும் களமாக போட்டித் தேர்வுகள் / பொதுத் தேர்வுகள் அமைவது நல்லதல்ல. அகில இந்திய அளவில், சர்வதேசத்தரங்களில் போட்டியிட்டு வெல்லும் அறிவுத்திறன் மிகுந்தவர்கள் தமிழக இளைஞர்கள். இதற்கு ஏற்ப, தேர்வாணையம் தனது தேர்வுகளில், உயர்தரத்தை நிர்ணயித்து, உறுதி செய்தால் - அத்தனை பேருக்கும் நல்லது.
நம்புவோம் - ‘நல்லதே நடக்கும்’!