டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்சிடிஎம் பள்ளியில் தேர்வு எழுத வந்த தேர்வர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத்தேர்வை 1.65 லட்சம் பேர் எழுதினர்.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிக வரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், தொழிலாளர் நல உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் 46 காலியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 23-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 44 ஆயிரம் பெண்கள் உள்பட 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
முதல் கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிரு்தது. அதன்படி, குரூப்-1 முதல்நிலைத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று 38 மையங்களில் நடந்தது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற பொது அறிவு தாள் தேர்வை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 828 பேர் எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 57 ஆயிரத்து 612 பேர் (25.78 சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை.
சென்னையில் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தி.நகர் வித்யோதயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் எம்ஜிஆர் மேல்நிலைப்பள்ளி உள்பட 12 இடங்களில் தேர்வு நடைபெற்றது. 37 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர்.
காலியிடங்களின் எண்ணிக்கை: சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்ப பள்ளி தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் காலை 9 மணிக்கு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “குரூப்-1 முதல்நிலைத்தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும். தற்போது 46 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
மெயின் தேர்வு: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வைப் போலவே டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வும் முதல்நிலைத்தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது. ஒரு காலியிடத்துக்கு 20 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத்தேர்வில் இருந்து மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவர்.
அந்த வகையில் தற்போது காலியிடங்கள் 46 ஆக அறிவிக்கப்பட்டிருப்பதால் 920 பேர் மெயின் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையும் கூடும்.