சென்னை: தமிழகம் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 45 சதவீதத்தை 2026 நிதியாண்டில் எட்டும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய மின்னணு தொழில்துறை சங்கம் (எல்சினா) சார்பில் ‘சோர்ஸ் இந்தியா’ மின்னணு விநியோகச் சங்கிலி மாநாடு, சென்னையில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்
மாநாட்டில் வணிக நிறுவனங்களுக்கு இடையே மின்னணு உற்பத்தில் முக்கிய பங்குதாரர்களாக வகிப்போர் பங்கேற்கின்றனர். மாநாட்டை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தொடங்கி வைத்து, தமிழகத்தின் மின்னணு தொழில் நிலை மற்றும் வளர்ச்சி அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
மின்னணு துறையில் அசெம்பிள் பணிகளுடன் நின்று விடாமல், உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை உருவாக்கத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் 'குளோபல் சவுத்' நாடுகளுக்கான மின்னணு மையமாக தமிழகத்தை மாற்ற தமிழக அரசு நடப்பாண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2025-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 15 பில்லியன் டாலராக 41 சதவீத பங்கை தமிழகம் கொண்டிருந்தது.
தற்போது 2026-ம் ஆண்டில் அது 45 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. 2030-க்குள் இந்தியாவின் மின்னணு உற்பத்தி துறை 500 பில்லியன் டாலர் இலக்கை எட்டும்போது, அதில் தமிழகம் மட்டும் 150 பில்லியன் டாலர் சந்தையாக உருவெடுக்கும். இவ்வாறு பேசினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதுல் லால் பேசும்போது, “மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தாராள வர்த்தக ஒப்பந் தங்களால் 2030-க்குள் 500 பில்லியன் டாலர் இலக்கை எட்டுவது சாத்தியம்” என்றார்.
இந்நிகழ்வில் தொழில்துறை செயலர் அருண் ராய், இந்திய மின்னணு தொழில்துறை சங்க தலைவர் சசிகுமார் கெந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.