தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு வாதம்

உச்ச நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் வாதிடப்​பட்​டது.

திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்​த​மான மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்​தர​விட்​டிருந்​தார்.

தொல்​லியல் துறை​யினர் அனுமதி​யுடன் கோயில் நிர்​வாகம் தரப்பினர் தீபம் ஏற்ற வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டிருந்​தார். தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் அமர்வும் உறுதி செய்​தது.

இந்த உத்​தரவுக்கு எதிராக கோயில் நிர்​வாகம், தமிழக அரசு, தர்கா நிர்​வாகம் தரப்​பிலும், தீபம் ஏற்ற பொது​மக்​களை அனுமதிக்க மறுத்த ஷரத்தை எதிர்த்து ராம ரவிக்​குமார் என்​பவரும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​தனர். அந்த மனுக்​கள் நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல்.எம்.பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் ஜெய்​தீப் குப்தா, சேகர் நாப்டே, கோபால் சங்​கரநாராயணன், பிரசாந்தோ சந்திர சென் ஆகியோர் ஆஜராகி வாதிட்​ட​தாவது:

கடந்த 1923-ம் ஆண்டு வழங்​கப்​பட்ட தீர்ப்​பில், மலைப் படிக்​கட்டு பகுதி மற்​றும் நெல்​லித்​தோப்பு உள்​ளிட்ட பகுதி​கள் தர்​கா​வின் கட்​டுப்​பாட்​டுக்​குள் வரக்​கூடியவை என்​பது தெளிவாக உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. நாடு சுதந்​திரம் பெற்ற பின்​னர் இது தொடர்​பான வழக்​கு​களை விசா​ரித்த உயர் நீதி​மன்​றமும் இதை உறுதி செய்​துள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள கோயி​லில் தீபம் ஏற்​றப்​படுவது என்​பது 150 ஆண்டு கால வரலாறாகும், இதற்​கான அனைத்து ஆவணங்​களை​யும் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்​ளோம்.

கடந்த 1994-ம் ஆண்டு இந்து முன்​னணி அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் மலை மீது ஏறி தன்​னிச்​சையாக தீபம் ஏற்​று​வோம் என அறி​வித்​த​போது, அது தொடர்​பான வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், ‘வெளி ஆட்​கள் யாரும் மலை மீது ஏறி தீபம் ஏற்​றக்​கூடாது’ என உத்​தர​விட்​டது.

இந்த விவகாரம், இந்து மதம் சார்ந்த விஷயம் மட்​டுமல்ல. இஸ்லாமியர்​களின் மத வழிபாட்டு உரிமையும் பறிக்​கப்​படக் கூடாது, அவர்​களின் உணர்​வு​கள் புண்​படக்​கூடாது என்​ப​தும் இதில் அடங்​கி​யுள்​ளது என உயர் நீதி​மன்​றம் சுட்​டிக்​காட்​டியுள்​ளது

நூறாண்​டுகளுக்கு மேலாக எந்த மதரீதி​யி​லான மோதல்​களும் இன்றி வழக்​க​மான நடைமுறை பின்​பற்​றப்​பட்டு வரு​கிறது. சட்​டம்-ஒழுங்கை மாநில அரசு பார்த்​துக் கொள்​ளும் என்​றாலும், நீதி​மன்ற உத்​தரவு​களால் சமூகத்​தில் எந்த சலசலப்​பும், பதற்​றமும் ஏற்​பட்​டுவிடக் கூடாது.

இன்​னும் ஒரு வாரத்​தில் கார்த்​திகை தீபத் திரு​விழா நடை​பெறவுள்​ள​தால், தேவையற்ற சச்​சரவு​களை தவிர்க்க, சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவுக்கு தடை விதிக்க வேண்​டும். மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள அனைத்து மனுக்​களை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் வாதிட்​டனர்.

இதற்கு பதிலளித்து வாதிட்ட மனுதா​ரர் தரப்பு வழக்​கறிஞர்​கள், “திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் விளக்கு ஏற்​று​வது என்​பது மிகவும் சாதா​ரண​மான நடைமுறைதான். இதற்​காக சிறப்பு அனுமதி பெற வேண்​டிய அவ​சி​யம் இல்லை. எனவே, பக்​தர்​களை நேரடி​யாக தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்​டும்” என வலியுறுத்​தினர்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் வழக்​கின் விசாரணையை இன்​றைக்கு தள்​ளிவைத்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT