

அருப்புக்கோட்டை: மனைவியையும், அவருடன் இருந்த கட்டித் தொழிலாளியையும் வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (27). இவரது மனைவி பொன்னழகு (21). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் கட்டிடக் கூலி வேலை செய்து வந்தனர். அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவருக்கும் பொன்னழகுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஆனந்தராஜுக்கும் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பல மாதங்களாக பழக்கம் தொடர்ந்த நிலையில், இந்த விவகாரம் பொன்னழகுவின் கணவர் சரவணக்குமாருக்கு தெரியவந்தது. சரவணக்குமார் கண்டித்தும் அவர்கள் இடையே பழக்கம் தொடர்ந்தது.
இந்நிலையில், வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சரவணக்குமார் வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டில் ஆனந்தராஜும், பொன்னழகும் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார், இருவரையும் கல்லால் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார். இதையறிந்த பக்கத்து வீட்டினர், நேற்று காலை அருப்புக்கோட்டை நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கவுதம் கோயல் விசாரணை நடத்தினார்.