திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில், பயனாளிக்கு நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர் விக்னேஷ்.
திண்டுக்கல்: மதுபான விற்பனையில் ரெஸ்டோ பார், தனியார்மயம் குறித்து ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் தனியார் மயமாகிறது என தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்டு துறைவாரியாக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்கள் தேக்கமடைந்துள்ளதை திரும்பப்பெற கோரப்பட்டுள்ளது. மது குடிப்போர் எதை விரும்புகிறார்களோ, அந்த மது பாட்டில்களை மட்டும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே சிறுமலை, ஜல்லிப்பட்டி பகுதிகளில் சில்லிங் மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கிருந்து மதுபாட்டில்களை வாங்குகிறார்கள் எனக் கண்டுபிடித்து, மதுபாட்டில்களை விற்பனைக்கு கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரெஸ்டோ பார், தனியார்மயம் என்பது குறித்து கலந்து ஆலோசித்தோம். மது விற்பனை தனியார்மயமாகிறதா என்றால் ஆமாம், இந்த துறையை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். ஆனால், மக்கள் வேண்டாம் என்றால் இந்த அரசு அதை செய்யாது. இவ்வாறு அவர் கூறினார். நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.