சபாநாயகர் அப்பாவு
சென்னை: அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.26) சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது தமிழ்நாடு அரசு தயாரிக்கும் உரையை ஆளுநர் வாசிப்பார்.
ஏற்கெனவே பின்பற்றப்படும் அவை மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தமிழக ஆளுநரின் உரை இடம்பெறும். ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை நிச்சயம் காப்பாற்றுவார் என நம்புகிறேன். அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு மொத்தமாக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என முடிவு செய்யப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.