

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (டிச.26) ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையும் இன்று இன்னொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு, சர்வதேச அளவிலான போர் பதற்றச் சூழல்கள் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
அந்தவகையில், தங்கத்தின் விலை டிச.12-ல் ரூ.98,960 ஆக இருந்தது. டிச.15-ல் ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாறு படைத்தது. இந்நிலையில், டிச.23-ல் ரூ.1 லட்சத்து 2,160 என்ற புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று டிச.26 சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,03,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.254-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்வும் வேதாந்தா குழும தலைவர் விளக்கமும்! கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி விலை சுமார் 1 லட்சமாக இருந்தது. இப்போது ரூ.2.45 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று கூறியதாவது: இந்த ஆண்டு, வெள்ளி தனது உடன்பிறந்த உன்னத உலோகமான தங்கத்தின் நிழலில் இருந்து வெளியேறி உள்ளது. வெள்ளிக்கு இது ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
வெள்ளியின் விலை, டாலர் மதிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 125% உயர்வைக் கண்டுள்ளது. தங்கத்தின் விலையும் இந்த ஆண்டு கணிசமாக (63%) உயர்ந்த போதிலும், வெள்ளி விலை உயர்வுடன் ஒப்பிடும்போது பாதி அளவுதான்.
வெள்ளியின் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது. இது தனித்துவமானது. ஏனெனில் உள்ளார்ந்த மதிப்பையும் அதேசமயம் தொழில் துறை தேவையையும் கொண்ட ஒரே உலோகம் இதுவே ஆகும்.
சூரிய ஆற்றல் மின்கலங்கள், மின்சாரபேட்டரி வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் என புதிய தொழில்நுட்பங்கள் எதுவாக இருந்தாலும், வெள்ளியை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவின் ஒரே வெள்ளி உற்பத்தியாளர் என்ற முறையில் எங்கள் குழுமத்தைச் சேர்ந்த இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் இதை நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால் வெள்ளியின் அசாதாரண பிரகாசம் நிலைத்திருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.