சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிக்குன்குனியா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கை:
சிக்குன்குனியா பாதிப்பு இருப்பதால், உரிய கண்காணிப்புடன் கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை, அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள், ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன் குனியா பரிசோதனைகளை மேற்கொண்டு நோய் பரவலை தடுக்க வேண்டும்.
டெங்கு அல்லது சிக் குன்குனியாவுக்கு சிகிச்சை தர தனி வார்டு அமைக்க வேண்டும். பாதிப்பை கண்டறியும் எலிசா பரிசோதனைக்கு தேவையான உபகரணங்களை இருப்பில் வைக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வீடுதோறும் கொசு உற்பத்தியை கண்காணிப்பதற்கான பணியில் போதிய நபர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏடிஸ் கொசுக்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். சிக்குன்குனியா பாதித்தால் காய்ச்சல், மூட்டு வலி, அதீத தசை வலி, உடல் அசதி அறிகுறிகள் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.