தமிழகம்

​காவிரியில் 36.65 டி.எம்​.சி நீரை உறுதி செய்க: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காவிரி​யில் வினாடிக்கு 21,413 கன அடி வீதம் நீர் திறக்​க​வும் ஆகஸ்ட் மாத இறு​திக்​குள் 36.65 டி.எம்​.சி நீர் கிடைப்​பதை உறுதி செய்​யக்​கோரியும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு கூடு​தல் மனு தாக்​கல் செய்​துள்​ளது.

அந்த மனு​வில், காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் கடந்த 11-ம் தேதி, தமிழ்​நாட்​டிற்கு நாள்​தோறும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்​களுக்கு தண்​ணீர் திறக்க கர்​நாடகத்​திற்கு உத்​தர​விட்​டிருந்​ததை ஏற்க முடி​யாது என கூறி​யுள்​ளது.

மேலும், கர்​நாடக அணை​களில் 77.35 டி.எம்​.சி நீர் இருப்பு உள்ள நிலை​யில், விகி​தாச்​சார முறைப்​படி கணக்​கிட்​டால் தமிழகத்​துக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை​யில் 31.74 டி.எம்​.சி நீர் வழங்கி இருக்க வேண்​டும். ஆனால் 10.38 டி.எம்​.சி நீர் மட்​டுமே வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில் 21.35 டி.எம்​.சி நீர் நிலு​வை​யில் உள்​ளது.

மேலும் ஆகஸ்ட் 12 முதல் 31-ம் தேதி வரை​யில் 15.28 டி.எம்​.சி நீர் வழங்க வேண்​டும். இவ்​வாறு மொத்​தம் 36.65 டி.எம்​.சி நீர் தமிழகத்​துக்கு வழங்க வேண்​டியது உள்​ளது. ஆனால், கர்​நாடக அணை​களில் போதிய நீர் இருந்த போதி​லும், கள யதார்த்​தத்தை கணக்​கில் கொள்​ளாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வானது, வறட்சி காலத்​தில் அல்​லது நீர் பற்​றாக்​குறை ஆண்​டின் போது அணை​களில் இருக்​கும் நீரை கணக்​கிட்டு விகி​தாச்​சார அடிப்​படை​யில் வழங்​கும் முறைக்கு முற்​றி​லும் எதி​ரான​தாகும்.

எனவே, ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையி​லான கால​கட்​டத்​துக்கு விகி​தாச்​சார அடிப்​படை​யில் தமிழகத்​துக்கு வினாடிக்கு 21,413 கன அடி வீதம் நீரை திறக்க கர்​நாடகத்​திற்கு உத்​தர​விட வேண்​டும் என தமிழக அரசு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

லட்சக்கணக்கான விவசாயிகள்: மேலும், ஆகஸ்ட் 12-ம் தேதி வரையி​லான கால​கட்​டத்​தில் கர்​நாடகம் வழங்க வேண்​டிய நீரை முழு​மை​யாக திறந்​து​விட்​டிருந்​தால், மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் 60 டி.எம்​.சி. அளவுக்கு உயர்ந்​திருக்​கும்.

குறுவை சாகுபடிக்​காக லட்​சக்​கணக்​கான விவ​சா​யிகள் காத்​திருக்​கும் நிலை​யில், இதற்​கு மேல் தாம​திக்​காமல் தமிழகத்​துக்கு விகி​தாச்​சார அடிப்​படை​யில் கிடைக்க வேண்​டிய நீரை கர்​நாடகம் திறந்​து​விடு​வதை உறுதி செய்ய வேண்​டு மென்​றும் தமிழக அரசு தனது கூடு​தல்​ மனு​வில்​ வலி​யுறுத்​தி உள்ளது.

SCROLL FOR NEXT