புதுடெல்லி: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க தவெக நிர்வாகி ஆதவ் ஆர்ஜூனாவும், நெரிசலில் உயிரிந்த இருவரின் உறவினரான எஸ்.பிரபாகரன் என்பவர் சிபிஐ விசாரணை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வானது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் அதன் விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கவும் கடந்த அக்.13 அன்று உத்தரவி்ட்டிருந்தனர். அதன்படி சிபிஐ அதிகாரிகள் கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது: அரசியல் சார்ந்த ஒவ்வொரு வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படி கோர முடியாது. மாநில விசாரணை அமைப்புகள் புலன் விசாரணையில் தோல்வியடைந்து விட்டதாக தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தால் மட்டுமே சிபிஐ விசாரணைகோர முடியும்.
அரசியல் உள்நோக்கம் காரணமாக மாநிலத்தில் ஆளும் கட்சிகள் மீது பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். இதுபோன்ற சம்பவங்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டால், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ரீதியாக தவறாக பயன்படுத்த வழிவகுக்கும்.
மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்கும், அதிகார பகிர்வுக்கும் ஊறுவிளைவிக்கும். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
விதிவிலக்கான வழக்கை தவிர ஒவ்வொரு வழக்கின் புலன் விசாரணையையும் ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் எனும் கட்டாயமில்லை கரூர் சம்பவத்தில் தமிழக காவல் துறை சட்டப்படி தனது கடமையை செய்துள்ளது. காவல்துறை மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல.
வழக்கின் புலன் விசாரணை நிறைவடையும்தருவாயில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூட்டம் நடத்தக் கூடாது என தவெக-வுக்கு தடை விதிக்க வேண்டும். தவெக தரப்பில் ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்துள்ள இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
எனவே கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்ற உத்தரவையும் ரத்து செய்து மாநிலத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடரவும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தொடந்து செயல்படவும் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு கோரப்பட்டுள்ளது.