விஜய் நாராயண்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரியில், தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கடந்த இரு ஆண்டுகளாக, தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் அவர் ஆஜராகி வந்தார்.
இந்த சூழலில், தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர், கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலின் உறவினர் ஆவார். விஜய் நாராயண் விரைவில் புதிய தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்க உள்ளார்.