தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காக தாய் மாமன் தங்க மோதிரம் வாங்க டெண்டர்

செப்.15-ல் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்​காக, தாய் மாமன் தங்க மோதிரம் வாங்க தமிழக அரசு டெண்​டர் கோரி​யுள்​ளது. இந்​தத் திட்​டத்​தைச் செப்​டம்​பர் 15-ம் தேதி முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க உள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது, ‘‘தேர்​தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்​தால், தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டம் கொண்டு வரப்​படும்’’ என்று தமிழக வெற்​றிக் கழக (தவெக) தலை​வர் விஜய் வாக்​குறுதி அளித்​திருந்​தார். இந்​தத் திட்​டம் பொது​மக்​களிடம் குறிப்​பாக பெண்​களிடம் அமோக வரவேற்பை பெற்​றது. அதன்​பின், தேர்​தலில் தவெக தனிப்​பெரும் கட்​சி​யாக வெற்றி பெற்​றது. கூட்​ட​ணிக் கட்​சிகளின் ஆதர​வுடன் விஜய் முதல்​வ​ரா​னார்.

இந்​நிலை​யில், தேர்​தலின் போது கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்​றும் வித​மாக, தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டத்தை முதல்​வர் விஜய் செப்​டம்​பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கி வைக்க உள்​ளார். இதற்​காக, ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டம்’ தொடர்​பான அரசாணை​யைத் தமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறை வெளி​யிட்​டது. அந்த அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசின் வெற்​றித் தமிழகம் தொலைநோக்கு திட்​டங்​களில் மிக​வும் முக்​கிய​மான திட்​டம் தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டம். அரசு மருத்​து​வ​மனை​களில் பிரசவிக்​கும் ஒவ்​வொரு குழந்​தையை​யும், பிரச​வித்த தாயை​யும் கவுரவிக்​கும் வித​மாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் பிரசவிக்​கும், தமிழகத்​தில் நிரந்​தர​மாக வசிக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த தாய்​மார்​களின் குழந்​தைகளுக்கு இந்​தத் திட்​டத்​தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்​கப்​படும்.

தமிழர் பாரம்பரியம்: தமிழர் பாரம்​பரி​யத்​தில் குழந்தை பிறந்த பிறகு தாயின் சகோ​தரர் தங்​கம் உள்​ளிட்ட பரிசுகளை வழங்​கு​வது வழக்​கம். அந்த மரபின்​படி, பிறந்த குழந்​தையைத் தாய் மாமன் வரவேற்று வாழ்த்​தும் வகை​யிலும், தமிழர் பண்​பாட்டை பிர​திபலிக்​கும் வகை​யிலும் அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் ஒவ்​வொரு குழந்​தைக்​கும் தாய் மாமனின் பங்கை ஏற்​று, அன்​பும் அக்​கறை​யும் நிறைந்த வரவேற்​பின் அடை​யாள​மாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்​கப்பட உள்​ளது.

ரூ.755.83 கோடி நிதி: தமிழக அரசின் சுகா​தார சேவை​களில் மக்​களின் நம்​பிக்​கையை வலுப்​படுத்​தும் நோக்​கிலும், அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தை​யின் பிறப்பை நினைவு கூறும் வகை​யிலும் தாய்​மை​யின் மகிழ்ச்​சி, முக்​கி​யத்​து​வத்தைக் கொண்​டாடும் வகை​யிலும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

இத்​திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்​காக தமிழக அரசு ஆண்​டு​தோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்​கீடு செய்​கிறது. இந்த திட்​டத்​தின் கீழ், ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகள் பயன்​பெறு​வார்​கள். தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டத்தை மறைந்த முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்த நாளான செப்​டம்​பர் 15-ம் தேதி முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க உள்​ளார். இவ்​வாறு அரசாணை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டத்​துக்​குத் தங்க மோதிரங்​களை வாங்​கு​வதற்​காக, தமிழ்​நாடு மருத்​துவ சேவை​கள் கழகம் (டிஎன்​எம்​எஸ்​சி) நேற்று டெண்​டர் கோரி​யுள்​ளது.

4,41,667 மோதிரங்கள்: அந்த டெண்​டரில், “தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டத்​துக்கு 4 லட்​சத்து 41,667 தங்க மோதிரங்​கள் 22 கேரட் தரத்​தில் (916 ஹால்​மார்க் சான்​றிதழ்) கொள்​முதல் செய்​யப்பட உள்​ளன. இதற்​காக ஆகஸ்ட் 17-ம் தேதி வரை ரூ.5,725 கட்​ட​ணம் செலுத்தி விண்​ணப்​பிக்​கலாம். ஆகஸ்ட் 18-ம் தேதி டெண்​டர் திறக்​கப்​படும். விண்​ணப்​பிப்​பவர்​கள் வைப்பு தொகை​யாக ரூ.50 லட்​சத்தை செலுத்த வேண்​டும்.

இந்த ஆண்டு டிசம்​பர் மாதம் வரை தேவைப்​படும் தங்க மோதிரங்​களை ஆகஸ்ட் மாதத்​தில் ஒரு லட்​சத்து 28,499 தங்க மோதிரங்​கள், செப்​டம்​பர் மாதத்​தில் ஒரு லட்​சத்து 17,438 தங்க மோதிரங்​கள் வழங்க வேண்​டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தேவைப்​படும் ஒரு லட்​சத்து 17,438 தங்க மோதிரங்​களை நவம்​பர் மாதத்​தி​லும், அடுத்த ஆண்டு ஏப்​ரல் மற்​றும் மே மாதத்​துக்​குத் தேவைப்​படும் 78,292 தங்க மோதிரங்​களை அடுத்த ஆண்டு பிப்​ர​வரி மாதத்​தி​லும் வழங்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக முதல்​வர் விஜய், கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி சென்னை எழும்​பூரில் உள்ள அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் பிறந்​தார். திரைத் துறையில் பெரிய நடிக​ராக வளர்ந்த பிறகு, தனது பிறந்த நாளை பெரும்​பாலும் எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் கொண்​டாடி வரு​கிறார்.

அன்​றைய தினம் அங்​குப்பிறக்​கும் குழந்​தைகளுக்கு தங்க மோதிரத்​தைப் பரி​சாக வழங்​கு​வது வழக்​கம். இந்​நிலை​யில்​தான் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் போதே அவர் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்​டத்தை வாக்​குறு​தி​யாக அளித்​திருந்​தார். தவெக அரசு பதவி​யேற்ற பிறகு, தேர்​தல் வாக்​குறு​தி​கள் ஒவ்​வொன்​றும் படிப்​படி​யாக நிறைவேற்​றப்​படும்​ என்​று முதல்​வர்​ விஜய்​ கூறியுள்​ளார்​.

ரூ.580 கோடி: ஒரு கிராம் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்றைய நிலவரப்படி ரூ.13,150 ஆக இருந்தது. தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ள ஒரு கிராம் எடையில் 4 லட்சத்து 41,667 தங்க மோதிரங்களின் மொத்த மதிப்பு ரூ.580 கோடியே 79 லட்சத்து 21,050 ஆகும். இதில் செய் கூலி, சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்தால் விலை மேலும் அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT