சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா நகர் சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி இழப்பீடு கோரி சிறுமியின் தாயார் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகையுடன் மேலும் ரூ.3 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இதுவரை இடைக்கால இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை தொடங்கும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என்றார். அதையேற்ற நீதிபதிகள் விசாரணையை வரும் டிச.9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.