சென்னை: சென்னையில் பழைய நடைமுறையால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சிஎம்டிஏ வழங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிடதிட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காக, பல அடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இதுவரை சிஎம்டிஏவின் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதிக்கு பல வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. கட்டிட அனுமதிக்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டதும், அது கள ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, பல அடுக்குமாடி கட்டிட குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.
அந்த குழு பரிசீலனை செய்து அளிக்கும் பரிந்துரையின்படி அரசுக்கு சமர்ப்பித்து அரசாணை பெற்ற பிறகு பல அடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர பகுதியில் பல அடுக்குமாடி கட்டிட திட்ட அனுமதியை எளிமையாக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஏற்கெனவே பின்பற்றப்படும் நடைமுறையால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், இனிவரும் காலங்களில் அபிவிருத்திதாரருக்கு ஏற்படும் கால தாமதத்தை குறைக்கவும், குறைந்த நேரத்தில் ஒப்புதல்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டிட விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டிட குழுவின் பரிந்துரை அடிப்படையில், பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை இனி சிஎம்டிஏ நிர்வாகமே வழங்கலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.