சென்னை: நமது வரலாறு ஆதாரங்களின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சித்தாந்தங்களின் அடிப்படையிலோ, பிளவுபடுத்தும் வாதங்களாகவோ சுருக்கப்படக்கூடாது என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
திங்க் இந்தியா அமைப்பு சார்பில் நடத்தப்படும் ‘தக் ஷிண பத 2.0’ மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தொடங்கி வைத்துப் பேசியதாவது: “ஆழமான கல்வியறிவு, முதன்மை வரலாற்றுச் சான்றுகள், அறிவுப்பூர்வமான விவாதங்கள் ஆகியவற்றின் மூலம் நமது வரலாற்றுப் புரிதலை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது வரலாறு தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்.
காலங்காலமாக நிலவும் அனுமானங்களைக் கேள்விக்குள்ளாக்குவதும், பல்வேறு தரப்பினரின் வரலாற்று விளக்கங்களை விமர்சன ரீதியில் அணுகுவதும், இந்தியாவின் கடந்த காலம் குறித்த விவாதங்களில் அறிவுசார் நேர்மையைக் கடைப்பிடிப்பதும் இளம் அறிஞர்களின் முக்கியப் பொறுப்பாகும். இந்தியாவின் அறிவுசார் விவாதங்களில் மாணவர்களும், தலைசிறந்த கல்வி நிறுவனங்களும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்.
தென்னிந்தியா முழுவதும் ‘தக் ஷிண பத’ தொடர்ச்சியான கல்வி மற்றும் அறிவுசார் இயக்கமாக உருவெடுக்க வேண்டும். இதன்மூலம் பிராந்திய பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியவர்களாகவும், தங்களது அறிவுசார் மரபுகளில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், அதேநேரம் தேசத்தின் மீதான பொறுப்பை முழுமையாக உணர்ந்தவர்களாகவும் விளங்கும் புதிய தலைமுறை உருவாகும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.