இந்தியாவிலேயே மிகப் பெரிய தொகுதி என்று அழைக்கப்பட்ட வில்லிவாக்கம், 2011-ம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்குப் பிறகு எல்லைகள் குறைக்கப்பட்டு மற்ற தொகுதிகளைப் போல் மாறியுள்ளது.
திருமங்கலம், அண்ணா நகர் (சில பகுதிகள்). கெல்லீஸ், அயனாவரம் என முக்கியப் பகுதிகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. புகழ் பெற்ற ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ஐசிஎஃப்) மற்றும் சிறு குறு தொழில்களின் மையமான சிட்கோ நகர். மண்டல இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை போன்ற பல்வேறு அடை யாளங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
இந்த தொகுதியில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தி 7 முறை வெற்றி பெற்றுள்ளன. வன்னியர், நாயுடு மற்றும் ஆதி திராவிடர் சமூகத்தினர் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுடன் முதலியார், ஆதி ஆந்திர மக்கள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் சமூகத்தினரும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்: மெட்ரோ ரயில் பணிகளுக்காக வில்லிவாக்கம் பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது பொதுமக்களை பெரும் தொல்லைக்கு ஆளாக்கி யுள்ளது. இங்கிருந்து கிளாம்பாக்கம் போன்ற வெளிவட்ட பேருந்து நிலையங்களுக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. அயனாவரம் போன்ற சந்தைப் பகுதி களில் முறையான கழிவுநீர் மேலாண்மை இல்லை. வியாபாரிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிரந்தரச் சந்தை இடங்கள் இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. பட்டா தொடர்பான சிக்கல்கள், குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எப்போது ? என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேட்பாளர்கள் பின்புலம்:
தற்போதைய திமுக எம்எல்ஏ வெற்றியழகனுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகனின் மகன் கார்த்திக் மோகனை இங்கு திமுக களமிறக்கியுள்ளது. ஆளுங்கட்சியின் பலம், வலுவான வாக்கு வங்கி கார்த்திக் மோகனுக்கு சாதகமாக இருந்தாலும், 'வெளி தொகுதி ஆள்' என்கிற பிம்பம் அவருக்கு ஒரு சவாலா கவே பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் அனுபவம் வாய்ந்த எஸ் எஸ்.ஆர்.விஜயகுமார் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னம், கட்சியின் பாரம்பரிய வாக்குகள் அவருக்கு கை கொடுக்கும் என நம்பப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக சேவகர் திருநங்கை ரோஷினி களம் காண்கிறார். தவெக சார்பில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ அரஜுனா போட்டியிடுகிறார். இதனால் தவெகவினர் உற்சாகமாகப் பணியாற்றி வருகின்றனர்.
பெரும்பாலும் திமுக- அதிமுக என இரு முனைப் போட்டியாகவே பல தொகுதிகள் உள்ள நிலையில், இத்தொகுதி பலம் வாய்ந்த மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. குறிப்பாக தவெக - திமுக இடையேதான் போட்டியே என்று தவெகவினர் கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேநேரம் திராவிட கட்சிகளின் கோட்டையாக விளங்கும் வில்லிவாக்கத்தை வெல்வது புதிய கட்சிகளுக்கு அவ்வளவு எளிதல்ல என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும் 'திக் திக்' மன நிலையிலதான் பிரதான கட்சிகள் உள்ளன.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்- 76,947, பெண்- 82,785, மூன்றாம் பாலினத்தவர் - 32, மொத்த வாக்காளர்கள் - 1,59,765.