க.சுந்தர் - திமுக | மகேஷ்குமார் - பாமக | 'மரம்' மாசிலாமணி - நாதக | முனிரத்தினம் - தவெக |

 
தமிழகம்

உத்திரமேரூர் தொகுதியில் உக்கிரமாக மோதும் கட்சிகளில் முந்துவது யார்?

இரா.ஜெயபிரகாஷ்

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 36-வது இடத்தைப் பிடித்துள்ளது உத்திரமேரூர் தொகுதி. வரலாற்றுப் புகழ்பெற்ற 'குடவோலை முறையின் மூலம் உலகுக்கே ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியது இந்தத் தொகுதி. வேளாண்மையும் ஆன்மிகமும் ஒருங்கே அமைந்த தனித்துவமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது இந்தப் பகுதி.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தகச் சோழன் காலத்து கல்வெட்டுகள் மூலம் குடவோலை தேர்தல் முறைக்குச் சான்றாகத் திகழும் வைகுண்டப் பெருமாள் கோயில், பல்லவர் காலக் கலைநயமிக்க சுந்தரவரதப் பெருமாள் கோயில் ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்களாகும்.

          

இத்தொகுதியில் இதுவரை திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் க.சுந்தர், அதிமுக வேட்பாளர் வி.சோம சுந்தரத்தை விட மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. நெல், வேர்க்கடலை, கரும்பு சாகுபடி இங்கு பிரதானம். அருகாமையில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலைகளில் இங்குள்ளவர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். வன்னியர், பட்டியலினத்தவர் வாக்குகள் இத்தொகுதியில் அதிக அளவில் உள்ளன.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்:

பாலாறு மற்றும் செய்யாற்றின் குறுக்கே போதிய அளவில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்பது இத்தொகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. குடவோலை கல்வெட்டுகள் உள்ள பகுதியைச் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தி, முறையான வழிகாட்டிகளை நியமிக்க வேண்டும்.

கோடைகாலங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். உத்திரமேரூர் பகுதிக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வேட்பாளர்கள் பின்புலம்:

இந்த முறை திமுக கூட்டணியில் தற்போதைய எம்எல்ஏ க.சுந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 5 முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாவட்டச் செயலர் மகேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை விவசாயி மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட 'மரம்' மாசிலாமணி போட்டியிடுகிறார். தவெக சார்பில் முனிரத்தினம் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் 4 முனைப்போட்டி நிலவி னாலும், திமுக -பாமகவுக்கு இடையேதான் போட்டி கடுமையாக உள்ளது. ஏற்கெனவே 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் க.சுந்தரை, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் எதிர்கொண்டு வருகிறார் பாமக வேட்பாளர் மகேஷ்குமார். கடைசி நேரப் பிரச்சார யுக்திகள். தலைவர்கள் பிரச்சாரம் போன்றவை வெற்றியை முடிவு செய்யும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

வாக்காளர்கள் விவரம்:

ஆண் - 1,18,564, பெண்- 1,25,300, மூன்றாம் பாலினத்தவர்- 58, மொத்த வாக்காளர்கள் - 2,43,922.

SCROLL FOR NEXT