காங்கிரஸ் - துரை. சந்திரசேகர் | அதிமுக - பி.பலராமன் | நாதக - ராஜாத்தி | தவெக - ரவி |
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 2-வதாக இடம் பெற்றுள்ள பொன்னேரி (தனி) தொகுதி, வங்காள விரிகுடா கடலையொட்டியுள்ளது.
இந்தியாவின் 2-வது மிகப் பெரிய உப்பு நீர் ஏரி, முகத்துவாரம், பழவேற்காடு பறவைகள் சரணாலயம், காமராஜர் துறைமுகம், ஐஓசி சமையல் எரிவாயு நிரப்பும் மையம். வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்கள், தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளிட்டவற்றை இத்தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில் நடைபெற்ற 16 தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், ஒருமுறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 4 முறை திமுகவும். 3 முறை இந்திய தேசிய காங்கிரஸும். ஒரு முறை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 தேர்தலில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் துரை. சந்திரசேகர் அதிமுக வேட்பாளர் பி.பலராமனை தோற்கடித்தார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்:
விவசாயம், மீன்பிடி தொழில் ஆகியவற்றை பிரதான தொழில்களாகக் கொண்ட இத்தொகுதியில், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்டவைக்காக தங்கள் விளைநிலங்களை அளித்தவர்களில் பலர், வாழ்வாதாரம் இழந்தது.
அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல்களால் பல விளைநிலங்கள் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, கடலோரம், பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு பகுதிகளில் மீன்வளம் பாதிப்பு, பழவேற் காடு, காட்டூர், திருவெள்ளவாயல், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதி களில் நிலத்தடிநீர் உவர்ப்பாக இருப்பதால் குடிநீர் பற்றாக் குறை உள்ளிட்டவை நீண்ட நாள் பிரச்சினைகளாக உள்ளன.
பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள திருஆயர்பாடி ரயில்வே சுரங்கப் பாதை, பொன்னேரி. ஆலாடு சாலை ரயில்வே சுரங்கப் பாதை ஆகியவற்றை இரு வழி பாதையாக விரிவுபடுத்தவேண்டும். பொன்னேரி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும், பழவேற்காடு ஏரியை தூர்வார வேண்டும்.
அனல் மின் நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன.
இத்தொகுதியில் பெருமளவில் வசித்து வரும் பட்டியலின மக்கள் தான் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப் பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார். தெலுங்கு மொழி பேசும் நாயுடு, வன்னியர், மீனவ சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர்.
வேட்பாளர்களின் பின்புலம்:
இத்தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் துரை.சந்திரசேகர் மீண்டும் போட்டி யிடுகிறார். அதிமுகவில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.பலராமன், நாதக-வில் ராஜாத்தி, தவெக-வில் ரவி ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.
இருப்பினும் காங்கிரஸ், அதிமுக இடையில் தான் இங்கு போட்டி நிலவுகிறது. திமுக அரசின் சமூக நலத் திட்டங்களும், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக உள்ளன. அதேபோல, கணிசமாக உள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் பக்கம் சாய வாய்ப்புள்ளது.
அதிமுக வேட்பாளர் பலராமன், தொகுதி முழுவதும் கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரிடம் பழகக் கூடியவர் என்ற பெயர் எடுத்துள்ளவர். கடந்த 2021 தேர்தலில் 9,689 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை தொகுதியில் உள்ள இளையோர் மற்றும் முதல்முறை வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தவெக, நாதக ஆகிய கட்சிகளுக்கு பிரியும் வாய்ப்பு உள்ளதால் வெற்றியைக் கணிப்பதில் சுணக்கம் காணப்படுகிறது.
வாக்காளர்கள் விவரம்:
ஆண் - 1,21,221, பெண் - 1,27,662, மூன்றாம் பாலினத்தவர் - 34, மொத்த வாக்காளர்கள் - 2,48,917.