தமிழகம்

மாற்றுப் பாலினத்தினர் உரிமையை பறிக்கும் மசோதாவை திருப்பி அனுப்ப குடியரசுத் தலைவருக்கு கம்யூ. கோரிக்கை

செய்திப்பிரிவு

அந்தரங்க தனியுரிமையை பறிக்கும் மாற்றுப் பாலினத்தினர் உரிமைகள் சட்டத்திருத்த மசோதாவை, குடியரசுத் தலைவர் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும், சமூக செயற் பாட்டாளர்களின் ஆட்சேபனைகளையும் நிராகரித்து 2019ம் ஆண்டு மாற்றுப் பாலினத்தோர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் தனிநபர் அந்தரங்க பாதுகாப்பு உரிமைகளும் தன்னாட்சி சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.

          

அதேபோல் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கிலும், நீதியரசர் கே.எஸ்.புட்ட சுவாமி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இது பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சித்தாந்த உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா மாற்றுப் பாலினத்தினர்களை சமூகத்தில் இருந்து வெளியேற்றி, சமூக ஒடுக்குமுறை தாக்குதல் களத்துக்கு தள்ளிவிடும்.

மனித உரிமைகளை பறிக்கும் மாற்று பாலினத்தினர் நலனுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். எதிர்மறை நோக்கங்கள் கொண்ட சட்டத் திருத்த மசோதாவை திருநங்கைகள் மற்றும் அவர்களது அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் விரிவாக விவாதித்து உரிய திருத்தங்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT