தமிழகம்

ராகுலுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நாளை ஆலோசனை

எம்.கே.விஜயகோபால்

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில் டிச.15-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியபோது, ‘‘தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி என்று உறுதியான நிலையில், தவெக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

‘விஜயை சந்தித்தது கூட்டணி குறித்து பேசுவதற்காக இல்லை’ என்று பிரவீன் சக்கரவர்த்தி தெளிவுப்படுத்தி இருந்தாலும் கூட்டணி குறித்த குழப்பம் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே நிலவுகிறது. திமுகவும் சந்தேகப் பார்வையுடனே காங்கிரஸை பார்க்கிறது.

இதுகுறித்த தகவல்கள் தொடர்ந்து தலைமைக்கு தெரிவிக்கப்பட்டும் வந்தது. அதனடிப்படையில், தமிழகம்- புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை டிச.15-ம் தேதி டெல்லியில் சந்திக்க ராகுல் காந்தி நேரம் ஒதுக்கியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், அழகிரி, தங்கபாலு உள்ளிட்ட 21 பிரதிநிதிகள், புதுச்சேரியில் இருந்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 15 பிரதிநிதிகள் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்’ என்றனர்.

SCROLL FOR NEXT