“அப்போது மட்டும் இனித்ததா?” - கேட்கிறார் சீமான்

திருச்சியில்  நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான். படம்:  ர.செல்வமுத்துகுமார்

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான். படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on
2 min read

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்கவந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சிக்கு வருபவர்கள் தேர்தல் அரசியலை தான் செய்கிறார்கள், மக்கள் அரசியலை செய்யவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில் தான் மடிக்கணினி, மகளிர் உரிமைத் தொகை என மக்கள் மீது பாசம் பொத்துக்கொண்டு வரும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.

அமைச்சர் நேருவின் துறையில் மட்டும் ஊழல் என்பதை நான் எதிர்க்கிறேன். எந்தத் துறையில் ஊழல் இல்லை. எல்லாத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது. அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறதே தவிர அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. மோடியை பார்த்ததும் இ.டி ஓடிவிடும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஏன் அந்த தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. தேர்தல் வருகிறது என்றதும் சேட்டையை காட்டுகின்றனர். தேர்தல் வருவதால் முருகன் மீது திடீர் பாசம் வந்துவிட்டது. இந்த விவகாரத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் அறுவடை செய்ய நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இருதரப்பினரையும் நீதிமன்றம் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அது வரவேற்கத்தக்கது.

தமிழக காவல் துறை தவறால் தான் இவ்வளவு பிரச்சினையே வந்தது. முதன்முதலில் கந்தூரி விழாவுக்கு கிடா வெட்டச் சென்றபோது அதைத் தடுத்து பிரச்சினையாக்கியதே காவல்துறை தான். இஸ்லாமியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு திமுகதான் என்றும், இந்துக்கள் தங்களுக்கு பாதுகாப்பு பாஜக தான் என்றும் சொல்வார்கள். இது நல்ல அரசியலா?

பாஜகவுக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுப்பதே திமுக தான். பாஜக இந்த பிரச்சினையை எடுக்கும்போது அதை திமுக விரும்புகிறது. கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் 15 சதவீதம் வாக்குகள் தங்களுக்கு உறுதியாகிறது என்று திமுக நினைக்கிறது. பாஜக வந்துவிடும் என பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க திமுக அரசியல் செய்கிறது. நான் இருக்கிறேன் பாஜக வராது; வரவிடமாட்டேன் என்றல்லவா ஸ்டாலின் சொல்ல வேண்டும்.

ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்து நான் பேசினேன். அதை விமர்சிக்கின்றனர். திமுக மேடையிலும் பாரதி குறித்து பேச சொன்னால் பேசுவேன். நான் பாரதியை எங்கும் பேசுவேன். பாரதி என்பது தமிழ். தமிழ் என்பது எனது தாய். என் தாய் இருக்கும் இடத்தில் இந்த மகன் இருப்பேன். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசினேன் அப்போது மட்டும் இனித்ததா?

பாஜகவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங், திமுகவின் அழைப்பின் பேரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார். அப்போது, ‘மத்தியில் பாஜவுக்கு 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுத்து, இந்தியா முழுமைக்கும் தனது அதிகார கிளையை பரப்புவதற்கு உதவியாக இருந்தவர் கருணாநிதி’ என ராஜ்நாத் சிங் பேசியது வீடியோ இருக்கிறது. போட்டு காட்டவா? பாஜகவை வளர்த்ததே கருணாநிதிதான். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>திருச்சியில்  நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான். படம்:  ர.செல்வமுத்துகுமார்</p></div>
பாஜக போட்டியிடும் தொகுதி பட்டியலுடன் அமித் ஷாவை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in