| படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ப.மாணிக்கம் தாகூர் தலைமையில் நேற்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்து; தவெக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று தமிழகம் முழுவதும் ஒருவார காலத்திற்கு காங்கிரஸ் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இதனுடன், ‘லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்’ என்ற முழக்கத்துடன் ‘ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம்’ நடத்த வேண்டும்.
எஸ்.எஸ்.ஏ.-2 திட்டத்தின்படி வட்டார, நகர, கிராம கமிட்டிகளைச் சீரமைக்க மாவட்டந்தோறும் பார்வையாளர்களை அனுப்பவும், அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு ‘மண்டலக் காங்கிரஸ் கமிட்டி’யை உடனடியாக அமைக்க வேண்டும்.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடைகளில் ரூ.7.5 கோடி வரை கையாடல் செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறைகேடு வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு நாளொன்றுக்கு சராசரியாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வந்த நன்கொடை, தற்போது ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் தினமும் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.ராமர் கோயிலை தேர்தல் பரப்புரையாகப் பயன்படுத்தி பாஜக 12 ஆண்டுகள் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த ஊழல் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராமர் கோயில் நிர்வாகம் தனிப்பட்ட அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அது தனியார் அறக்கட்டளை என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தர உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
எனவே, பொதுமக்கள் நன்கொடையில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நடப்பவற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில்,அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.