பெங்களூரு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நதி நீரை திறப்பது மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திக்கிறார். இந்த தகவலை தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஆண்டுதோறும் கர்நாடகா, தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை மாதந்தோறும் பிரித்து வழங்க வேண்டும்’ என தனது இறுதி தீர்ப்பில் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பெய்தது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் 53 சதவீதம் அளவுக்கே நீர் இருப்பில் உள்ளது.
இதன் காரணங்களை சுட்டிக்காட்டி கர்நாடக அரசு, கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட மறுத்தது. இதனை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம், நீர் திறப்பது தொடர்பாக கர்நாடகாவுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாய அமைப்பினரும் எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 22-ம் தேதி நிலவரப்படி, கர்நாடகா தமிழகத்துக்கு 3.5 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை பெய்யாததைக் கணக்கில் கொண்டாலும், தமிழகத்திற்கு மேலும் 3 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும் என நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் விவாதிக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கர்நாடக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், வருகிற ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பரிசீலித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தரப்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திக்க ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இரு முதல்வர்களும் அன்றைய தினம் பெங்களூருவில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இரு மாநில அரசுகளும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.
வேளாண் அமைச்சர் தகவல்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வணிகவரித் துறை புதிய கட்டிடம், மாவட்ட அரசு மருத்துவமனை சித்தமருத்துவ பிரிவு கட்டிடம் மற்றும் ஒருங்கிணைந்த பொதுசுகாதார ஆய்வகம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்த தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
கர்நாடகாவில் ஆக.3-ம் தேதி மேகேதாட்டு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு கர்நாடக முதல்வர் சிவகுமாரிடம் பேச உள்ளார்.கர்நாடக அரசு தரப்பில் போதிய மழை இல்லை என்பதால் தண்ணீர் திறக்க முடியாது என கூறி வருகின்றனர். இருந்தாலும் தமிழக முதல்வர் நமது உரிமையை கேட்டுப் பெறுவார். இவ்வாறு அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
முந்தைய சந்திப்புகள்: 1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்படுவதற்கு முன்னதாக, 1968 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில் 26 முறை இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. 1996ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும், கர்நாடக முதல்வராக இருந்த ஜே.எச். படேலும் சந்தித்து பேசியுள்ளனர். 2012ல் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்துப் பேசினார்.
2016ல் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு டெல்லியில் இரு மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக இரு மாநில முதல்வர்களும் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசவில்லை. தற்போது தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.