தவெக அரசின் முதல் பட்ஜெட் அடங்கிய பையுடன் முதல்வர் விஜய், நிதியமைச்சர் மரிய வில்சன்.
சென்னை: தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், ரூ.812 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) திருத்தப்பட்ட பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை நேற்று கூடியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நெ.மரிய வில்சன் தாக்கல் செய்தார். பேரவையில் 10.01 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கி 12.31 மணிக்கு பட்ஜெட் உரையை முடித்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதே அரசின் ‘வெற்றித் தமிழகம் - தொலைநோக்குத் திட்டங்கள்’ இலக்கு.
இந்த பட்ஜெட்டை மக்கள் நலன் காக்கும் கருவியாகப் பயன்படுத்தி தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளோம். மேலும், மத்திய அரசின் நிதி பகிர்வு உட்பட மாநில அரசின் மொத்த வருவாய் வரவு 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.3,50,027 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள்:
> ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் (ஒரு சவரன்) தங்கக் காசு, ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
> கர்ப்பிணி பெண்களுக்கான ‘தாய் கேர்’ சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இதில் கர்ப்பிணிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
> ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும், ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
> கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘வெற்றி மடிக் கணினி திட்டம்’ ரூ.2,000 கோடியில் செயல்படுத்தப்படும்.
> 11-ம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும்.
> வெற்றி வீடு திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின் அலகுத் தொகை ரூ.3.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டில் 70,000 வீடுகள் ரூ.3,500 கோடியில் கட்டப்படும்.
> மீன்பிடி தடை கால உதவித்தொகை ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும். இதன்மூலம் 1.93 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
> வீடுகளில் சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
> மாநிலம் முழுவதும் பொது இடங்களில் 20,000 மின் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.
> இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ‘டீப் டெக்’ நகரமாக ‘அறிவகம்’ உருவாக்கப்படும். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகள், ‘விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக’ அறிவிக்கப்படும்.
> சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.1,375 கோடியில் அமைக்கப்படும்.
> முதல் முறை ஹஜ் பயணிகளுக்கான மானியம் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்.
> காயிதே மில்லத் நினைவாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளில் புதிய விருது வழங்கப்படும்.
> காவிரி - வைகை - குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பெண்ணையாறு - பாலாறு உள்ளிட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
> கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மீட்டெடுத்து சென்னையின் அடையாளமாக மாற்ற உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.
> கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் 2,500 எக்டேர் பரப்பளவில் புதிய சதுப்புநில அலையாத்திக் காடுகள் வளர்க்கப்படும்.
> மாநிலம் முழுவதும் ரூ.50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் நிறுவப்படும். மேலும், ரூ.42 கோடியில் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
> அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டுப் பாடவேளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
> நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.
> போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கானப் பணிகளை முன்னெடுக்க மறுவாழ்வு நிதியாக ரூ.70 கோடி ஒதுக்கப்படும்.
> அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2031-ம் ஆண்டு வரை புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அடிப்படை காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.