சென்னை: பொங்கல் பரிசு தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் 2021–ல் பொங்கல் பரிசு உடன் ரூ.2,500 பொங்கல் பரிசு பணம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் 2023, 2024-ம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசு ரொக்கப் பணம் எதுவும் வழங்காமல், தமிழக மக்களை ஏமாற்றியது.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 2022 முதல் தற்போதைய 2025-ம் ஆண்டு பொங்கல் வரை, தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு, கடந்த கால அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டபடி அளித்திருக்க வேண்டிய தொகை ரூ.10 ஆயிரம்.
ஆனால், தமிழக மக்களுக்கு தரவேண்டிய பொங்கல் பரிசுப் பணத்தில் 2022 முதல் 2025-ம் ஆண்டு வரை ரூ.8 ஆயிரத்தை கொடுக்காமல், 2026-ம் ஆண்டு மட்டும் ரூ.3 ஆயிரம் அதிகபட்ச பணத்தை அள்ளித் தருவது போல், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக, தமிழக அரசு நாடகம் ஆடுவது வெட்கக் கேடானது.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், 2021-ம் ஆண்டு அதிமுக அரசு தமிழக மக்களுக்கு வழங்கியது போல் வழங்கி இருக்க வேண்டிய தொகையில், திமுக அரசு கொடுக்காமல் ஏமாற்றிய ரூ.5 ஆயித்தையும், தற்போதைய பொங்கல் பரிசு ரூ.3 ஆயிரம் சேர்த்து, தமிழக மக்களுக்கு ரூ.8 ஆயிரம் பொங்கல் பரிசை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக, நேர்மையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.