

பெருமாள் பிள்ளை
சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது, அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக விடுத்த அறிக்கைகளை, அவருக்கே இ-மெயில், தபால் மூலமாக திருப்பி அனுப்பும் போராட்டத்தை அனைத்து அரசு மருத்துவர்களும் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் குறைவாக இங்குள்ள சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
கோரிக்கைகளை நிறை வேற்ற அரசை வலியுறுத்தி 2019-ம் ஆண்டு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், நேரடியாக வந்து பக்கத்தில் அமர்ந்து ஆதரவு தந்ததை நன்றியோடு நினைவுப்படுத்த விரும்புகிறோம். அப்போது, மருத்துவர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும் திமுக ஆட்சி அமைந்ததும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன் படி, உரிய ஊதியம் வழங்கப்படும் என மருத்துவர்களிடம் சத்தியம் செய்ததை யாருமே மறக்கவில்லை. ஊதிய கோரிக்கை போராட்டத்தில் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்துள்ளார்.
அதேபோல், கரோனா பணியில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா அரசு வேலை கேட்டு நான்கரை ஆண்டுகளாக கண்ணீர் விட்ட பிறகும் அரசு கருணை காட்டவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அளித்த வாக்குறுதியின்படி, அரசானை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கரோனா பணியில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக விடுத்த அறிக்கைகளை, அவருக்கே இ-மெயில், தபால் மூலமாக திருப்பி அனுப்பும் போராட்டத்தை அனைத்து அரசு மருத்துவர்களும் தொடங்கியிருக்கிறோம். இது நிச்சயம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.