தமிழகம்

சீனாவுக்கு சாதகமாக ‘கிரேட் நிகோபார்’ திட்டத்தை தடுக்க ராகுல் முயற்சி: தமிழக பாஜக

செய்திப்பிரிவு

சென்னை: ‘கிரேட் நிகோபார்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, சீனாவின் கைப்பாவை என தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சீனாவின் கைப்பாவையாக ராகுல் காந்தி செயல்படுகிறார். இந்தியாவின் கடல் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் ரூ.72,000 கோடி மதிப்பிலான கிரேட் நிகோபார் திட்டத்தைச் சீனாவுக்குச் சாதகமாக ராகுல் காந்தி தடுக்க முயல்கிறார்.

இந்தத் திட்டம் நிறைவேறினால், மலாக்கா நீரிணையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியக் கடற்படையால் முடக்கப்படும். இதனைத் தவிர்க்கவே ராகுல் காந்தி இத்தகைய சதியில் ஈடுபட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ‘கிரேட் நிகோபார்’ பெருந்திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் அனுமதி வழங்கியது. ஆனால், தொடக்கம் முதலே இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

சமீபத்தில் நிகோபார் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கிருந்து ஒரு காணொலியை வெளியிட்டார். அதில், சுமார் 160 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான அடர்ந்த மழைக்காடுகளை அழித்து இத்திட்டத்தைச் செயல்படுத்துவது இயற்கைக்கே எதிரானது என்றும், இத்திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் ஒளிந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், இது சரியாகத் திட்டமிடப்படாத ஒரு திட்டம் என்றும், இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கே தமிழக பாஜக எதிர்வினையாற்றியுள்ளது.

SCROLL FOR NEXT