தமிழக பாஜக அலுவலகம்

 
தமிழகம்

“கொளத்தூர் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட வேண்டும்” - தமிழக பாஜக

தமிழினி

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தேவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெரவள்ளூர் பகுதியை சுற்றியுள்ள ஏறத்தாழ 350 ஏக்கர் நிலம், வண்ணான் குளம் நீர் நிலை மற்றும் பல்வேறு குளம், குட்டை, அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில், சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

சென்னை, கொளத்தூரில் உள்ள வண்ணான்குளம் ஏரி ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சிக்கு ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்ஸ்ரீ வச்சவா, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய்துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சிக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு விஷயங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக முதல்வராக தார்மீக பொறுப்பேற்று நேரிடையாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற இரு மற்றும் பல்வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுகள் கடந்த காலங்களில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு விஷயங்களில் சமரசம் இல்லாமல் அனைத்து அரசு துறைகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விரைந்து செயல்பட வேண்டும் என்று தீர்ப்புகள் வழங்கியிருக்கின்றன.

ஆனாலும், நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் அவமதிக்கும் வகையில், உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது துரதிஷ்டவசமானது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மருத்துவமனைகள், விளையாட்டுத் திடல்கள், பேருந்து நிலையங்கள் போன்றவை 2021 முதல் 2025 ஆண்டு காலகட்டத்தில் ஒரு சராசரி சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தி இருப்பதற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், அதே நேரத்தில் மக்களின் நீண்ட கால கோரிக்கையான பெரம்பூர் சர்ச் முதல் ரெட்டேரி ஜங்ஷன் வரை பேப்பர் மில்ஸ் சாலையை அகலப்படுத்துவேன் என்று 15 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மழைக்காலங்களில்

தண்ணீர் சேமித்து வைக்கும் கேட்ச்மெண்ட் பாயிண்டுகளாக விளங்கும் பல்வேறு குளம், குட்டை, ஏரிகளை தற்போது திமுகவில் இருக்கும் சிறுசேமிப்பு குழு தலைவர் புரசை ரங்கநாதன் திமுக கூட்டணியில் எம்எல்ஏவாக இருந்தபோது, காங்கிரஸ் மற்றும் திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அகற்ற வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் 2011–ம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்படும். குளம், குட்டை, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தூர்வாரப்படும். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும் என்று அளித்த வாக்குறுதிகள் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.

நீதிமன்றங்கள் பலமுறை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்துள்ள போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக எதிர்க்கட்சியில் இருந்தபோதும், தற்போது ஆளுங்கட்சியில் முதல்வராக இருகின்ற போதும் எந்த விதமான முன்னெடுப்பும் எடுக்கவில்லை.

எனவே தற்பொழுது முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினராக, மாநில முதல்வராக, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT