சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து ரூ.63,143 கோடி மக்கள் பணத்தை மோடி அரசு மீட்டுள்ளதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொல்கத்தாவைச் சேர்ந்த ‘ கணேஷ் ஜுவல்லரி ஹவுஸ்’ நிறுவனத்தின் மூலம், கடந்த 2012-2014 இடைப்பட்ட ஆண்டுகளில் 25 வங்கிகளில், போலி ஆவணங்கள் மூலம் ரூ.2,672 கோடி மோசடி செய்யப்பட்டது.
இந்த மெகா ஊழலைச் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தப்பிச் சென்ற குற்றவாளி கம்லேஷ் பரேக்கை, சிபிஐ அமைப்பு சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் உதவியுடன் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது.
கடந்த மே மாதம் அவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் கடன் வழங்கும் முறைகளில் இருந்த குளறுபடிகளுக்கு இந்த ஊழல் ஒரு மிகப்பெரும் சாட்சியாகும்.
ஆனால், பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொருளாதாரக் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடும் நபர்களைப் பிடிக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கினாலும் அவர்களின் சொத்துக்களை முடக்கவும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரவும் ஏதுவாக ‘தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018’ உள்ளிட்ட பல்வேறு வலுவான சட்டங்களை மோடி அரசு அமல்படுத்தியது.
இதன் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் சிக்கலான சட்ட நடைமுறைகள் தகர்க்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் பணம் மீட்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலத்தின் மூலம் ரூ.63,143 கோடி மீட்கப்பட்டு வங்கிகளிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்துக்கும் காரணம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் புதிய சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.