கோப்புப்படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து 3-வது ஆண்டாக தன் உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார். இதையடுத்து அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்ததாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து ஜன.24 வரை பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில் பேரவையின் 2-வது நாள் கூட்டம் நேற்று கூடியது. அதில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, கவிஞர் ஈரோடு தமிழன்பன், தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.