சென்னை: நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய சிறப்புமிக்க கூட்டத்தொடராக அமைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பதினேழாவது பேரவையின் 2-ம் கூட்டம் ஆக.5 முதல் செப்.8 வரையும் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் பேரவை மொத்தம் 28 நாட்கள், 178 மணி நேரம் 31 நிமிடங்கள் கூடியது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், தொகுதி சார்ந்த கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலப் பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு உரிய வாய்ப்புகள் வழங்கப் பட்டன.
110 விதி அறிவிப்புகள்
சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில், முதல்வர் விஜய் மட்டும் மக்கள் நலன், விவசாயிகள் நலன், சமூகப் பாதுகாப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, விளையாட்டு மற்றும் நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக 17 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில், நெல், கரும்புக்கான ஊக்கத் தொகை, பயிர்க் கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி, பால் கொள்முதல் விலை உயர்த்தியது, எம்எல்ஏக்களுக்கு அரசு வாகனம், படி, 3 இலவச சிலிண்டர், பரந்தூர் புதிய விமான நிலையம் கைவிடுதல், சென்னையில் நவீனவசதிகளுடன் சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் அமைப்பது உள்ளிட்டவை முக்கியமானவை.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடும் நடைமுறை, எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543 ஆக நிரந்தரமாக்குதல், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, 51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் வெளியிடப்பட்டன.
கவனஈர்ப்பு தீர்மானங்கள்
எம்எல்ஏக்களிடம் இருந்து 14,399 வினாக்கள் வரப்பெற்றன. அவற்றில் 12,733 வினாக்கள் அனுமதிக்கப்பட்டன. கேள்வி நேரத்தில் எடுக்கப்பட்ட 23 வினாக்கள், 242 துணை வினாக்களுக்கு அமைச்சர்கள் உடனுக்குடன் விரைவாகவும், தெளிவாகவும் பதிலளித்தனர்.
தொகுதிகளின் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், கேள்வி நேரத்திலேயே பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
அவசரத்தன்மை வாய்ந்த மிக முக்கியப் பொருண்மைகள் தொடர்பாக 45 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 106 உறுப்பினர்கள் உரையாற்றினர்.
மேலும், உறுப்பினர்களிடமி ருந்து 929 கவன ஈர்ப்புகள் வரப்பெற்று, அவற்றில் 153 கவன ஈர்ப்புகள் அனுமதிக்கப்பட்டன. 7 கவன ஈர்ப்புகளுக்கு அவையில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், கவன ஈர்ப்புகளில் 10 உறுப்பினர்கள் உரையாற்றினர். இதுதவிர, 13 அரசினர் சட்ட முன்வடிவு கள் நிறைவேற்றப்பட்டன.
நேரலை சாதனை
பதினேழாவது சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. பேரவையின் அனைத்து நடவடிக்கைகளை யும் பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் தொடர்பான பதிவுகள் மட்டும் 10,92,182 பார்வைகளைப் பெற்றுள்ளன.
பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்ற போதிலும், உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை அவையில் முழுமையாகப் பதிவு செய் வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பும் நேரமும் வழங்கப்பட்டது.
விரிவான விவாதங்கள்
கூட்டத்தொடர் முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, தொழில் வளர்ச்சி,
சமூகநலன் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருண்மைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
கடந்த 28 நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு கட்சியினரின் மோசமான நடவடிக்கையால் அவர்கள் வெளியேற்றப் பட்டனர். இதன்மூலம் ஜனநாயக மாண்பையும் மக்கள்நலனையும் முன்னிறுத்திய சிறப்புமிக்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடராக இது அமைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.