

ஜெகநாதன்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள ஆண்டர்சன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(77). இவர் 1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர்நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று எம்பியாக இருந்தார்.
இவர் தன் முதல் மனைவி லலிதாவுக்கு தெரியாமல், வனிதா என்பவரை 2-வது திருமணம் செய்ததாக, முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பூந்தமல்லி குற்றவியல் நீதித்துறை நடுவர்-2 நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை, 2021-ம் ஆண்டு திருவள்ளூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இதில், ஜெகநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆகவே ஜெகநாதன், முதல் மனைவிக்குத் தெரியாமல் 2-வது திருமணம் செய்த வழக்கின் தீர்ப்பை நேற்று முன்தினம் நீதிபதி சுனில் வினோத் அளித்தார். அத்தீர்ப்பில் ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.