கோப்புப் படம்

 
தமிழகம்

நீட் தேர்வு ரத்து, வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: பேரவையில் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்கள் ஆதரவு; பாஜக எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தனித் தீர்​மானம், வெளி​நாட்டு நன்​கொடை திருத்த மசோ​தாவை எதிர்க்​கும் தீர்​மானம் ஆகியவை நிறை​வேற்​றப்​பட்​டன.

தமிழக சட்​டப்​பேரவை நேற்று காலை கூடியதும் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ், நீட் தேர்வு தொடர்​பான தனித் தீர்​மானத்​தைக் கொண்டு வந்து பேசி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: நீட் தேர்வு சமூக நீதி, சமத்​து​வம் மற்​றும் மாநிலங்​களின் உரிமை​களுக்கு எதி​ரானது. தமிழ் வழி​யில் கல்வி பயிலும் மாண​வர்​கள், கிரா​மப்​புற மற்​றும் சமூகப் பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய மாண​வர்​களின் மருத்​து​வக் கல்வி வாய்ப்​பு​களை இத்​தேர்வு முறை பெரிதும் பாதிக்​கிறது.

ஒரு மாண​வர் 12 ஆண்​டு​கள் பள்​ளி​யில் கற்ற கல்​வியை விட, ஒரே நாளில் நடை​பெறும் ஒரு தேர்வே அவரது எதிர்​காலத்தை தீர்​மானிக்​கக் கூடாது. இது கல்​வி​யின் உண்​மை​யான நோக்​கத்​துக்​கும், பள்ளி கல்​வி​யின் மதிப்​புக்​கும் முரணானது.

நீட் தேர்வு நடை​முறை​யில், தனி​யார் பயிற்சி மையங்​கள்​தான் பெரிதும் பயன்​பெறுகின்​றன. சமூக நீதி​யைப் பாதிக்​கும், சம வாய்ப்​பைக் குறைக்​கும், மாநிலங்​களின் தனித்​து​வத்​தைப் புறக்​கணிக்​கும் எந்த ஒரு முயற்​சி​யை​யும் எந்த ஒரு தேர்​வை​யும் ஏற்க முடி​யாது என்​பதே இந்த அரசின் நிலைப்​பாடு.

தமி​ழ​கம் பல ஆண்​டு​களாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் மருத்​துவ மாண​வர் சேர்க்​கையை வெற்​றிகர​மாக நடை​முறைப்​படுத்​தி, நாட்​டிலேயே முன்​னோடி​யான பொது சுகா​தார அமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளது.

எனவே மத்​திய சட்​டங்​களில் தேவை​யான திருத்​தங்​களை மேற்​கொண்​டு, நீட் நுழைவு தேர்வு முறையை ரத்து செய்​து, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் மாநில அரசே மருத்​துவ மாண​வர் சேர்க்​கையை நடத்தி கொள்ள வழி​வகை செய்ய வேண்​டும். நீட் பிரச்​சினை​களுக்கு நிரந்தர தீர்​வு, கல்​வியைப் பொதுப் பட்​டியலில் இருந்து மாநில பட்​டியலுக்கு மாற்​று​வது​தான். இந்த தீர்​மானத்தை ஒரு​மன​தாக நிறை​வேற்​றித் தர வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பின்னர் இந்த தீர்​மானத்தின் மீது பொதுப்​பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், உயர் கல்​வித் துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன், ஏ.வ.வேலு (தி​முக) உட்பட உறுப்பினர்கள் பலர் ஆதரவாகப் பேசினர். மேலும், வி.​முத்​து​ராஜா (தி​முக), ஓ.எஸ்​.மணி​யன் (அதி​முக), டி.​ரா​மச்​சந்​திரன் (இ.கம்​யூ), ஆர்​.செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்), சவுமியா அன்​புமணி (பாமக) ஆகி​யோர் தீர்​மானத்​துக்கு ஆதரவு தெரி​வித்​தனர். பாஜக எம்​எல்ஏ போஜ​ராஜன் தீர்​மானத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து வெளிநடப்பு செய்​தார்.

இதையடுத்​து, குரல் வாக்​கெடுப்பு மூலம் தீர்​மானம் ஒரு​மன​தாக நிறை​வேறிய​தாக பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் அறி​வித்​தார்.

எஃப்​சிஆர்ஏ மசோதா: இதே​போல், வெளி​நாட்டு நன்​கொடை ஒழுங்​கு​முறை சட்ட (எஃப்​சிஆர்ஏ) திருத்த மசோ​தாவை மத்​திய அரசு திரும்​பப் பெறக் கோரி, தமிழக சட்​டப்​பேர​வை​யில் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று தனித் தீர்​மானம் கொண்டு வந்​தார். அப்​போது அவர் பேசும்​போது, ‘‘எஃப்​சிஆர்ஏ விதி​முறை​கள் தொண்டு நிறு​வனங்​களின் தன்​னாட்​சி​யை​யும், சிறு​பான்​மை​யினர் கல்வி நிறு​வனங்​களின் செயல்​பாட்​டை​யும் பாதிக்​கும். இந்​தச் சட்​டத்​தால் சிறு​பான்​மை​யினர் பாதிக்​கப்​படு​வார்​கள். இந்த மசோ​தாவை மத்​திய அரசு திரும்​பப் பெற வேண்​டும். இந்த மசோதா தொடர்​பாக மாநில அரசுகளு​டன் மத்​திய அரசு விரி​வாக ஆலோ​சனை நடத்த வேண்​டும்’’ என்​றார்.

இதைத்​தொடர்ந்து இத்​தீர்​மானத்​தின் மீது உறுப்​பினர்​கள் பேசி​ய​தாவது:

அமைச்​சர் ஏ.எம்​.ஷாஜ​கான்: தொண்டு நிறு​வனங்​கள், ஆதர​வற்​றோர் இல்​லங்​கள் நடத்​தப்​படு​வது பாதிக்​கப்​படும். இந்​தச் சட்​டம், சிறு​பான்​மை​யினரை முடக்​கும் முயற்​சி​யாகும்.

அமைச்​சர் வன்​னியரசு: முதலில் சிஏஏ கொண்டு வந்து முஸ்​லிம்​களை 2-ம் தர குடிமக்​கள் ஆக்​கி​னார்​கள். தற்​போது எஃப்​சிஆர்ஏ மூலம் கிறிஸ்​தவர்​களை குறி​வைத்​துள்​ளனர். கிறிஸ்​தவக் கல்வி நிறு​வனங்​களை அபகரிக்க மத்​திய அரசு முயற்சி செய்​கிறது.

எஸ்​.ஆஸ்​டின் (தி​முக): இந்த மசோ​தாவை மத்​திய அரசு திரும்​பப் பெற வேண்​டும் என்று எங்​கள் கட்​சி​யின் தலை​வர் ஸ்டா​லின் ஆரம்​பத்​தில் இருந்தே வலி​யுறுத்தி வரு​கி​றார். இந்​தச் சட்​டத்​தால், சிறு​பான்​மை​யினரின் சொத்​துகளைப் பறி​முதல் செய்ய முடி​யும். தொண்டு நிறு​வனங்​களின் உரிமை பறி​போகும்.

அக்ரி கிருஷ்ண​மூர்த்தி (அதி​முக): எஃப்​சிஆர்ஏ சட்​டத்தை வரவேற்​கும் அதே​நேரத்​தில், சிறு​பான்​மை​யினரைப் பாது​காக்க தேவை​யான திருத்​தங்​களைச் செய்து இந்த மசோ​தாவை நிறை​வேற்ற வேண்​டும். வெளி​நாட்டு நிதி மீதான கட்​டுப்​பாடு​களை வரவேற்​கி​றோம்.

எம்​.​போஜ​ராஜன் (பாஜக): தற்​போது இருக்​கும் சட்​டத்​தில் சில திருத்​தங்​கள், மாற்​றங்​களை செய்ய வேண்​டி​யுள்​ளது. தேசத்​துக்கு எதி​ரான செயல்​களைத் தடுக்​கும் நோக்​கில்​தான் இந்த சட்​டம் கொண்டு வரப்​படு​கிறது. எனவே. எப்ஃசிஆர்ஏ அவசி​யம் தேவை.

எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா (மமக): வெளி​நாடு​களில் இருந்து பணம் வரு​கிறது என்​றால் அது பிரத்​யேக வங்​கிக் கணக்கு வாயி​லாகத்​தான் வரும். எனவே, இந்த நிதி​யைக் கண்​காணிக்​கலாம். எஃப்​சிஆர்ஏ சட்​டம் சிறு​பான்​மை​யின மக்​களை மட்​டுமல்ல; கல்​வி, மருத்​து​வச் சேவை​யில் ஈடு​பட்​டுள்ள அனைத்து தரப்​பினரை​யும் பாதிக்​கும்.

தொடர்ந்து ஆர்​.செல்​ல சு​வாமி (மார்க்​சிஸ்ட்), கே.​மாரி​முத்து (இந்​திய கம்​யூனிஸ்ட்), பிரேமலதா விஜய​காந்த் (தே​மு​தி​க) ஆகியோர் தீீர்மானத்தை ஆதரித்து பேசினர்.

தீர்​மானத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து பாஜக உறுப்​பினர் வெளிநடப்பு செய்​தார். அதைத்​தொடர்ந்து குரல் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு இத்​தீர்​மானம் ஒரு​மன​தாக நிறை​வேறிய​தாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிர​பாகர் அறிவித்​தார்​.

SCROLL FOR NEXT