சட்டப்பேரவையில் நேற்று மேகேதாட்டு அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய்.

 
தமிழகம்

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​கா​விரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், புதிய அணை கட்​டும் திட்​டத்​துக்கு எவ்​வித அனு​ம​தி​யும் அளிக்​கக் கூடாது என்று மத்​திய அரசை வலி​யுறுத்​தி​யும் சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் கொண்​டு​வந்த அரசினர் தனித் தீர்​மானம், அனைத்​துக் கட்​சிகளின் ஆதர​வுடன் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

மேகே​தாட்​டு அணை தொடர்பாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் நேற்று அரசினர் தனித் தீர்​மானம் கொண்டு வந்​தார். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: காவிரி நடு​வர் மன்​றம் கடந்த 2007 பிப்​.5-ம் தேதி அளித்த இறுதி தீர்ப்​பு, உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018 பிப்​.16-ம் தேதி அளித்த தீர்ப்பு ஆகிய​வற்றை மதிக்​காமல், சம்​பந்​தப்​பட்ட படுகை மாநிலங்​களின் ஒப்​புதலை​யும், மத்​திய அரசின் எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமல் தன்​னிச்​சை​யாக மேகே​தாட்​டு​வில் அணை கட்ட கர்​நாடக அரசு முயற்​சிப்​பதை ஏற்க முடி​யாது. கர்​நாடக அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

கர்​நாடக அரசின் மேகே​தாட்டு அணை திட்​டத்​துக்கு தொழில்​நுட்​பம், சுற்​றுச்​சூழல் உட்பட எவ்​வித அனு​ம​தி​யை​யும் மத்​திய அரசு அளிக்​கக் கூடாது. காவிரி நடு​வர் மன்​ற​மும், உச்ச நீதி​மன்​ற​மும், காவிரிப் படுகை ஒரு பற்​றாக்​குறை படுகை எனக் குறிப்​பிட்​டு, படு​கை​யின் மொத்த நீரை​யும், படுகை மாநிலங்​களுக்கு பகிர்ந்​தளித்​து​விட்​ட​தால், காவிரிப் படு​கை​யில் புதிய திட்​டங்​களை மேற்​கொள்​ளவோ, கூடு​தலாக நீரை பயன்​படுத்​தவோ இயலாது.

இந்த விவ​காரம் தமிழகம் மற்​றும் கர்​நாடக மாநிலங்​களின் உணர்​வுப்​பூர்​வ​மான பிரச்​சினை. எனவே, மேகே​தாட்​டு​விலோ, காவிரிப் படு​கை​யில் வேறு எந்த இடத்​திலோ அணை அல்​லது புதிய நீர்த்​தேக்​கத் திட்​டத்​தை, பிற படுகை மாநிலங்​களின் ஒப்​புதலின்​றி​யும், மத்​திய அரசின் அனு​ம​தி​யின்​றி​யும் மேற்​கொள்​ளக் கூடாது என கர்​நாட​காவை மத்​திய அரசு அறி​வுறுத்த வேண்​டும். கர்​நாடக அரசின் விரி​வான திட்ட அறிக்​கையை மத்​திய நீர்வளக் குழு​மம் பரிசீலிக்​கவோ, அதன்​மீது நடவடிக்கை மேற்​கொள்​ளவோ, அதற்கு அனு​மதி வழங்​கவோ கூடாது. மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​கீழ் புதிய நடு​வர் மன்​றத்தை மத்​திய அரசு அமைக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தீர்​மானத்தை முன்​மொழிந்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: அரசி​யல் கட்​சிகளுக்​குள் கொள்​கை, நிலைப்​பாடு​களில் வேறு​பாடு​கள் இருக்​கலாம். ஆனால், மக்​களுக்​கான பிரச்​சினை என்​றால், எல்லா கட்​சிகளுமே மக்​கள் பக்​கம்​தான் நிற்​கும். நமது விவ​சா​யிகள், மக்​களுக்​காக நிற்க வேண்​டியது நமது கடமை. நதிநீர் உரிமை​யைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும் நம் அனை​வருக்​கும் உள்​ளது.

அந்த உணர்வு அடிப்​படை​யில், கட்சி வேறு​பாடு​களை ஒதுக்கி வைத்​து​விட்​டு, யாரும் யாரை​யும் குறை சொல்​லாமல் ஒட்​டுமொத்த தமிழகத்​துக்​காக நாம் அனை​வரும் ஓரணி​யில் நிற்​பவர்​கள் என்​பதை நிரூபிக்க வேண்​டும். நமது விவ​சா​யிகள், தமிழக மக்​களுக்​காக கொண்டு வரப்​படும் இந்த தீர்​மானத்தை ஒரு​மித்த கருத்​துடன் அனை​வரும் நிறைவேற்​றித் தரவேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இதைத் தொடர்ந்​து, தீர்​மானத்​தின் மீதான விவாதத்​தில் பேசிய திமுக, அதி​முக, காங்​கிரஸ், விசிக, பாமக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், தேமு​திக, கொமதேக, மதி​முக, மமக, மஜக உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகளின் உறுப்பினர்களும் தங்​கள் ஆதர​வைத் தெரி​வித்​தனர்.

உதயநிதியின் கோரிக்கை ஏற்பு: எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசும்​போது, ‘‘மேகே​தாட்டு அணை கட்​டும் பிரச்​சினை ஒரு புதிய விவாதம் என்​ப​தால், மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​படி, புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என மத்​திய அரசை இந்த பேரவை வலி​யுறுத்​துகிறது எனும் திருத்​தத்தை சேர்க்க வேண்​டும்’’ என்றார்.

அதற்கு முதல்​வர் விஜய், ‘‘மேகே​தாட்டு பிரச்​சினை குறித்து எனது தலை​மை​யில் கடந்த மே 26-ம் தேதி நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், தனி நடு​வர் மன்​றம் அமைப்​பது குறித்து சட்ட வல்​லுநர்​களு​டன் ஆலோ​சிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, தனி நடு​வர் மன்​றம் அமைக்​கத் தேவை​யான சட்ட நடவடிக்​கைகள் ஏற்​கெனவே எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

எனவே, எதிர்க்​கட்​சித் தலை​வர் அளித்த கருத்தை தனித் தீர்​மானத்​தில் கூடு​தலாக சேர்க்​கலாம்’’ என்​றார். அதன்​பிறகு, முதல்​வர் முன்​மொழிந்த திருத்​தப்​பட்ட தீர்​மானம், பேர​வை​யில் குரல் வாக்​கெடுப்பு மூல​மாக ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது. தீர்​மானத்​துக்​கு ஆதர​வு அளித்​த அனைத்​துக்​ கட்​சிகளுக்​கும்​ முதல்​வர்​ நன்​றி தெரிவித்​தார்​.

நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்

முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, கண்ணன், ஆறுமுகம், சுவாமிநாதன், நாஞ்சில் முருகேசன் ஆகியோரது மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலர் சி.கு.ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் பிரபாகர் வாசித்து முடித்ததும், அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT