தமிழக சட்டப்பேரவை | கோப்புப்படம்
சென்னை: ‘‘கர்நாடக மாநிலத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகே வனப்பகுதியில் 3 தமிழர்கள் வனத்துறையினரால் கடந்த 15-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். மான் வேட்டைக்கு வந்த போது 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் நேற்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது பழனிசாமி பேசியதாவது: கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் மிகப்பெரிய சதி நடைபெற்று இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமெனில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இப்பிரச்சினையின் உண்மை நிலவரத்தைத் தமிழக மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்: இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. இந்தப் போலி என்கவுன்ட்டரை தேசிய மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்திருக்க வேண்டும். இதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மீறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெளிவான நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவர்களைத் தொடர்ந்து பாமக எம்எல்ஏ கணேஷ்குமார், காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு தொடர்பாகச் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாவது: கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கடந்த ஆக.15-ம் தேதி கர்நாடக வனத்துறையின் வேட்டை தடுப்பு நடவடிக்கையில் அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. வனத்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து முறையான நீதி விசாரணைக்குக் கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற சூழல், முதலில் சுட்டது யார் என நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
விசாரணைக்குப் பின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்கப்படும். அதற்கான விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகக் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மீது அன்னூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கூறுகையில், ‘‘முதல்வரின் ஆணைக்கிணங்க, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வனத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.