

மதுரை: மதுரை அருகே பட்டாகத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.34 ஆயிரத்தை பறித்த நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
நாகமலை புதுக்கோட்டை அருகிலுள்ள மேலக்காலில் இருந்து கொடிமங்கலம் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் பணியில் இருந்தார். அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 பேர் பெட்ரோல் நிரப்பச் சென்றனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பிய பிறகு திருமுருகன் பணம் கேட்டபோது அவர்கள் பட்டாகத்தியை காட்டி மிரட்டி, திருமுருகன் சட்டை பையில் இருந்த பெட்ரோல் விற்ற கலெக்சன் பணம் ரூ.34,800-ஐ பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
இதில் சோழவந்தான் அருகிலுள்ள முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், முத்து இளங்கோவன், அசோக் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசோக்கை தேடுகின்றனர்.
சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த போலீஸாரை மதுரை மாவட்ட எஸ்பி தேவநாதன் பாராட்டினார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.