புதுச்சேரி: புதுச்சேரி விடுதிக்கு தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஆலோசனை இங்கு நடத்த இருகிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு தவெகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
இதனால் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பினார். இதில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களுடன் நிபந்தனையுடன் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. மேலும், அதற்கான கடிதத்தையும் விஜயிடம் காங்கிரஸ் கட்சியினர் நேரில் சந்தித்து வழங்கினர்.
இதனால் தவெக ஆட்சி அமைக்க எம்எல்ஏக்கள் பலம் 113 ஆக உயர்ந்தது. இதனால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி தமிழகத்தின் தற்போதைய பொறுப்பு ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இருப்பினும் போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், 118 எம்எல்ஏக்கள் பட்டியலுடன் வந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என பொறுப்பு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இக்கூட்டத்துக்கு பின் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் முனுசாமி, ‘தவெகவுக்கு எந்த வகையிலும் அதிமுக ஆதரவு அளிக்காது’ என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் அறிவிப்பதாக கூறினார்.
இதனையடுத்து அதிமுகவின் 46 எம்எல்ஏக்களும் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் உள்ள ‘த ஷோர் திரிஷ்வம்’ ரிசார்ட்டுக்கு வந்து தங்குமாறு கட்சி மேலிடம் இருந்து தகவல் கிடைக்கவே, தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ ஒவ்வொருவராக ரிசார்ட்டுக்கு வர தொடங்கினர்.
அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று வரை ஓ.எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சேவூர் ராமச் சந்திரன், மோகன், சொரத்தூர் ராஜேந்திரன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, வெங்கடாசலம் உள்பட 25 அதிமுக எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். தொடர்ந்து மற்றவர்களும் வர உள்ளனர்.
இதையடுத்து அங்கு புதுச்சேரி போலீஸார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்துள்ளார். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று அல்லது நாளை புதுச்சேரி வர உள்ளதாகவும், அப்போது எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.