கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.440 கோடியை போலீஸார் முடக்கியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 60-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் சைபர் கிரைம் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் வங்கியில் 3 கணக்குகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ரூ.440 கோடிக்கும் அதிகமான பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
செல்வாக்கை தவறாகப் பயன்படுத்துதல், நேர்மையற்ற நிதிப் பரிவர்த்தனைகள், சந்தேகத்துக்குரிய வகையில் சட்ட விரோதமாகப் பணம் திரட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் மூலம் பெறப்பட்ட தொகை, பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டு வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
எனவே, இந்த வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். கட்சிக்குள் அதிகாரக்குழப்பம் நிலவுகிறது. அது சரியாகும் வரை, கட்சிப் பணத்தை பரிமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘எம்எல்ஏக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, திரிணமூல் கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.440 கோடி முடக்கப்பட்டுள்ளது. இனிமேல் பணத்தை எடுக்கவோ, மற்றொரு கணக்குக்கு மாற்றவோ முடியாது. இந்த வங்கிக் கணக்குகளுக்குப் பணம் எங்கிருந்து வந்தது என்பது போன்ற விவரங்களையும் எம்எல்ஏக்கள் கேட்டுள்ளனர்’’ என்றார்.