தமிழகம்

விஜய்யை மிரட்டும் பாஜக: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஓசூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டணிக்காக விஜய்யை பாஜக மிரட்டுவது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சர்ட்டிபிகேட் கூட தரவில்லை. அந்த படத்துக்கு சென்சார் சர்ட்டிபிகேட்டை தராமல் தேவையில்லாமல் இழுத்தடிக்கின்றனர்.

தங்கள் கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. பாஜக ஒரு வாஷிங் மெஷின் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது பாஜக ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்; அதே நபர் பாஜகவில் இணைந்துவிட்டால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டுவிடும்.. இதுதான் பாஜக.

அரசியல் லாபங்களுக்காக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக தவறாகப் பயன்படுத்தி வருகிறது. பாஜக என்ன செய்கிறது என்பதை மக்கள் நன்றாகவே கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. காங்கிரஸ் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது.

தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசிய காங்கிரஸ் தலைவர் ஆகியோர் திமுகவுடன் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர். தொகுதிப் பங்கீடு மற்றும் பிற விஷயங்கள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்கள் 5 பேர் கொண்ட ஒரு குழுவையும் அமைத்துள்ளனர். எனவே, அவர்கள் திமுகவுடன்தான் இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT