தஞ்சாவூர்: திருவையாற்றில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா வரும் 3-ம் தேதி தொடங்குகிறது.
ஜன. 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். செயலாளர் அரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைக்கிறார். சிறப்பு விருந்தினராக ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பங்கேற்கிறார். சபா செயலாளர் முஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார்.
அன்று இரவு சீர்காழி சிவசிதம்பரம், திரைப்பட பின்னணிப் பாடகி மஹதி, ஜெயராஜ் கிருஷ்ணன்- ஜெய, திருப்பதி ஹரிபாபு குழுவினரின் பாடல், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து ஜன. 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பாடல் மற்றும் நாகசுரம், வயலின், சாக்ஸபோன், வீணை, மேண்டலின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணியளவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். முன்னதாக, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி, விழாப் பந்தலை அடையும். அன்று மாலையும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர், இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.