கீர்த்திகா முனியசாமி, கரு மாணிக்கம், மருத்துவர் ராஜீவ்

 
தமிழகம்

திருவாடானை தொகுதியில் மும்முனை போட்டி: காங்கிரஸ், அதிமுக, தவெக தீவிர பிரச்சாரம்

கி.தனபாலன்

ராமநாதபுரம்: திருவாடானை தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி நிலவுவதால் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தொகுதி யில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தவெக, அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் 1952 முதல் 2021 வரை 16 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சுதந்திரா கட்சியினர் தலா 2 முறையும், காங்கிரஸ் 6 முறையும், திமுக மற்றும் தமாகா தலா 2 முறையும், அதிமுக 2 முறையும் (2016-ல் அதிமுக கூட்டணி முக்குலத்தோர் புலிப்படை) வெற்றி பெற்றுள்ளனர்.

2011-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் சுப.தங்கவேலனும், 2016-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாசும், 2021 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கரு மாணிக்கமும் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 6 முறையும், தமாகா 2 என அதிகபட்சமாக வெற்றிபெற்று இத்தொகுதி காங்கிரஸின் கோட்டையாக கருதப்படுகிறது. 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ கரு மாணிக்கமே மீண்டும் போட்டியிடுகிறார்.

          

கடந்த தேர்தலில் கரு மாணிக்கம் 79,364 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் ஆணிமுத்து 65,512 வாக்குகளும், அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் 33,426 வாக்குகளும் பெற்றனர். அமமுக வாக்குகளை பிரித்ததால் அதிமுக வேட்பாளர் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.

இத்தொகுதியில் முக்குலத் தோர் முதலிடத்திலும், ஆதி திராவிடர் 2-ம் இடத்திலும், இஸ்லாமியர் 3-ம் இடத்திலும், கிறிஸ்தவர்கள் 4-ம் இடத்திலும், யாதவர் 5-ம் இடத்திலும் மற்றும் இதர சமூகத்தினர் உள்ளனர். தொகுதியில் மும்முனை போட்டி நிலவுவதால் வெற்றி வித்தியாசம் குறைந்த அளவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதிமுகவில் மாவட்டச் செயலாளரின் மனைவியும், மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார்.

அதனால் அனைத்து நிர்வாகிகளும் திருவாடானையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இத்தொகுதி தவெக வேட்பாளர் மருத்துவர் ராஜீவ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் ராமநாதபுரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும் மருத்துவராக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

யாதவ சமுதாயத்தை சேர்ந்த இவர் அச்சமுதாய ஓட்டுகளை பெறும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. தற்போதைய சூழலில் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

SCROLL FOR NEXT