புதுச்சேரி: வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சி மேலிடத்தின் அழைப்பின் பேரில் புதுச்சேரி தலைவர்கள் 3 பேர் நாளை டெல்லி செல்கின்றனர் என பாஜக புதுச்சேரி தலைவர் வி. பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி திங்கள்கிழமையே தொடங்கி விட்டது. நேரமே இல்லை. பாஜக புதுச்சேரி பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா புதுச்சேரிக்கு இன்று மாலை வந்து நிலவரத்தை ஆய்வு செய்கிறார்.
மேலும், கட்சியின் மேலிட அழைப்பின் பேரில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கட்சித் தலைவராகிய நானும் டெல்லிக்கு நாளை செல்கிறோம். கூட்டணியில் புதுச்சேரி பாஜகவுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் 14 தொகுதிகள் கிடைத்துள்ளன.
இதில் பாஜகவுக்கான தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் என்ற வகையில் இறுதி செய்துள்ளோம். அதிலிருந்து ஒருவரை கட்சியின் உயர்மட்டக் குழு முடிவு செய்து ஜனநாயக முறைப்படி அறிவிக்கும்.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்தப் பிறகு 13 நாள் பிரச்சாரம் செய்ய நாள் இருக்கிறது. புதுச்சேரியில் ரோடு ஷோ செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தருவதாகக் கூறியுள்ளனர். இன்னும் தேதி முடிவாகவில்லை. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்துக்கும் தயார் செய்யுமாறு கூறியுள்ளனர்.
புதுச்சேரி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை இன்னும் 2, 3 நாளில் தயாராகிவிடும். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதி என்பது கட்சி தலைமை தெரிவிக்கும். லட்சிய ஜனநாயகக் கட்சி கூட்டணியில் உள்ளதா என்பதையும் பாஜக தலைமைதான் முடிவு செய்யும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.