தமிழகம்

மெரினாவில் சவாரி குதிரை தறிகெட்டு ஓடியதில் தாய், மகள் உட்பட 3 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

சென்னை: மெரினா கடற்கரையில் வெடிச் சத்தம் கேட்டு மிரண்டு ஓடிய மாடு முட்டித் தள்ளியதில் சவாரி குதிரை தறிகெட்டு ஓடியது. அது எட்டி உதைத்ததிலும், மோதித் தள்ளியதிலும் குதிரை ஓட்டி, தாய், மகள் காயமடைந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.15) மாலை குதிரை சவாரி தொழிலாளி சக்திவேல் (30) ஒரு சிறுமியை குதிரையில் ஏற்றி சவாரி அழைத்துச் சென்றார்.

அப்போது, வெடிச் சத்தம் கேட்டு மிரண்டு ஓடிவந்த மாடு ஒன்று, குதிரையை முட்டித் தள்ளியது. பயந்துபோன குதிரை, சக்திவேலை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, பாய்ந்தோடியது. தலையில் பலத்த காயமடைந்த சக்திவேல் மயங்கி விழுந்தார். குதிரை மீது அமர்ந்திருந்த சிறுமியும் கீழே விழுந்தார்.

இதற்கிடையே, வேகமாக ஓடிச் சென்ற குதிரை, அவ்வையார் சிலையின் பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் குல்பி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த ரஞ்சிதா (31) மற்றும் அவரது மகள் ரியான்சி (10) இருவரையும் மோதி தள்ளிவிட்டுச் சென்றது.

தலை, தோள்பட்டையில் காயமடைந்த இருவரும் மயக்கமடைந்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மெரினா போலீஸார் விரைந்து வந்து, 3 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

குதிரை ஓட்டி சக்திவேலுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சிதா, ரியான்சி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT