சென்னை: தமிழ்வழியில் படித்தோருக்கு மு்ன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் கீழ் ஒரு நபர் ஒருமுறை மட்டுமே சலுகை பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் சட்டத்துறை செயலர் பி.சுமதி ஆகஸ்ட் 11-ம் தேதியிட்ட சிறப்பு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு (2026) ஆகஸ்ட் 6-ம்தேதி தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தப் புதிய சட்டத்தின்படி தமிழ்வழியில் படித்தோருக்கான 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டை ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பெற முடியும்.
ஏற்கெனவே தமிழ்வழி இடஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீண்டும் இந்த ஒதுக்கீட்டின்கீழ் பயன்பெற முடியாது.
இந்தப் புதிய சட்டம் தொடர்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படுவதற்கு முன்னர் (அதாவது ஆகஸ்ட் 11-க்கு முன்பு) மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களுக்கு இந்த சட்டத்திருத்தம் பொருந்தாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இச்சலுகையை பெறுவதற்கு, குறிப்பிட்ட அரசுப் பணிக்கு நிர்ணயிக்கப்படு்ம் கல்வித்தகுதியை 1-ம் வகுப்பில் இருந்து தமிழ்வழியில் படித்திருக்க வேண்டியது அவசியம்.