சேலம் பெரியார் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், திருவனந்தபுரம் என்ஐஐஎஸ்டி இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்.படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம்: எரிசக்தி துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று திருவனந்தபுரம் என்ஐஐஎஸ்டி இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் கூறினார். சேலம் பெரியார் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற 24-வது பட்டமளிப்பு விழாவுக்கு, பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார்.
துணைவேந்தர் நிர்வாகக் குழு அமைப்பாளர் சுந்தரவல்லி வரவேற்றார். முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற திருவனந்தபுரம் என்ஐஐ எஸ்டி இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியா தற்போது உலகின் 4-வது பொருளாதார நாடாகத் திகழ்கிறது.
விரைவில் 3-வது இடத்தைப் பிடிக்கும். ஆண்டுதோறும் 332 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்து, உணவு தானிய உற்பத்தியில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது.
அதேபோல, எரிசக்தி துறையிலும் அதிக வளர்ச்சி கண்டுள்ளது. 2025-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 476 ஜிகாவாட் மின் திறனை இந்தியா எட்டியுள்ளது. புதுப்பிக்க எரிசக்தி திறனில் உலகில் 4-வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு, நீர், எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2024-25-ல் தனி நபர் எரிசக்தி நுகர்வு 1,538-1541 கிலோவாட்டாக உள்ளது. 2030-ல் இது 2,000 கிலோவாட்டை எட்டும். எரிசக்தி துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆர் (என்ஐஐஎஸ்டி) நிறுவனம், நகராட்சி கழிவுநீரில் இருந்து பச்சை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான உயிரி-மின்வேதியியல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. கடின உழைப்பு, நேரம் தவறாமை, நேர்மை, ஒழுக்கம், தொழில்முறை வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி 358 பேருக்கு முனைவர் பட்டச் சான்றிதழ்களும், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் சிறப்பிடம் பிடித்த 110 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.
மொத்தம் 49,429 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பல்கலை. பதிவாளர் ராஜ், ஆட்சிக்குழு, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான கோவி.செழியன் விழாவில் பங்கேற்கவில்லை.