சென்னை: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது மதுபான உற்பத்தியாளர்கள் தற்போது கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசுக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரியும் விதிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு மதிப்பு கூட்டப்பட்ட வரி சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் அதன் அளவு மற்றும் பாட்டில் தயாரிக்கப்படும் பொருட்ளுக்கு ஏற்ப வரி விதக்கவும், அதிகபட்சமாக ரூ.20 வரை விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி வருவாயை மதுபாட்டில்களை மறுசுழற்சி செய்ய அல்லது பாதுகாப்பாக அகற்றும் பணிகளுக்கும் மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும், மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் அரசு பயன்படுத்தும்.
மேலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் மதுபான உற்பத்தியாளர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கும் ஒவ்வொரு மதுபான பெட்டிக்கும் கூடுதலாக ரூ.90 கட்டணம் பெறப்படுகிறது.
மேலும் மூலப்பொருட்களின் விலை மற்றும் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் மது பானங்களின் விலை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
டாஸ்மாக் நிர்வாகமும் இதுகுறித்து ஆலோசனைகளை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்கப்பட்டுள்ளதால் மதுபானங்கள் விலை உயர வாய்ப்புள்ளது.