தமிழகம்

திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூண் விவகாரம்: உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்​கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி / மதுரை: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி கடந்த 20-ம் தேதி உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த இடைக்​கால உத்​தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

மதுரை திருப்​பரங்​குன்​றத்​தில் பல ஆண்​டுகளாக மலை மீதுள்ள உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் அருகே உள்ள மண்​டபத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், கடந்த ஆண்டு கார்த்​திகை தீபத்​தின் போது, மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விட கோரி இந்து தமிழர் கட்​சித் தலை​வர் ராம ரவிக்​குமார், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மனு தாக்​கல் செய்​தார். அதை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை, கார்த்​திகை திருநாள் அன்று தீபத்​தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்​தது. உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை​யின் உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு மற்​றும் தர்கா உட்​பட சில தரப்​பினர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​தனர்.

இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் அர​விந்த் குமார் மற்​றும் விபுல்.எம்.பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. இது​தொடர்​பாக நீதிப​தி​கள் கடந்த நவம்​பர் 20-ம் தேதி பிறப்​பித்த இடைக்​கால உத்​தர​வில், சென்னை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்​குத் தடை விதித்​தனர். அத்​துடன், நடப்​பாண்டு கார்த்​திகை தீபத் திருநாள் அன்று திருப்​பரங்​குன்​றம் மலை தீபத்​தூணில் ஒரு​முறை மட்​டும் தீபம் ஏற்ற இடைக்​கால அனுமதி வழங்​கி​யிருந்​தது. இந்​நிலை​யில், இந்த உத்​தர​வின் சில பகுதி​களைத் திரும்​பப் பெறக் கோரி, தமிழக அரசின் இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது:

கல் தூண் பாரம்​பரிய மத வழிபாட்​டுத் தலமா என்​பது குறித்து எந்த முடிவும் எடுக்​கப்​பட​வில்லை. எந்​தவொரு உரிமையும் அங்​கீகரிக்​கப்​பட​வில்லை. ஏற்​கெனவே உள்ள நீண்ட கால நடைமுறையை மாற்​றும் வகை​யில் கட்​டாய இடைக்​கால உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. பிரதான வழக்கு 2027-ம் ஆண்டு ஜனவரி 2-வது வாரத்​தில் இறுதி விசா​ரணைக்கு ஒத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விவகாரத்​தில் 2026-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால உத்​தரவு வழங்​கு​வது மேல்​முறையீட்டு மனுக்​களின் நோக்​கத்​தையே பல​வீனப்​படுத்​தும் வகை​யில் உள்​ளது. பாரம்​பரிய இட​மான உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் அருகே தீபம் ஏற்​றப்​படும் என்​ப​தால் யாருக்​கும் உரிமை மறுக்​கப்​பட​வில்லை. ஆனால், தர்​கா​வுக்கு மிக அரு​கில் உள்ள இடத்​தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்​கு​வது மாறு​பட்ட விளைவு​களை ஏற்​படுத்​தும்.

மேலும் காவல் துறை, சிஆர்​பிஎப் பாது​காப்பு மற்​றும் ஊர்​வலங்​களுக்​குத் தடை போன்ற கடுமையான ஏற்​பாடுகள் தேவைப்​படுவதே, அப்​பகுதி​யில் உள்ள பதற்​றமான சூழலை​யும், சட்​டம் ஒழுங்கு அபாயத்​தையும் காட்​டு​கிறது. எனவே, இந்த விவகாரம் தமிழகம் முழு​வதும் நில​வும் மத நல்​லிணக்​கத்​துக்​குப் பாதிப்பை ஏற்​படுத்​தும் அச்​சம் உள்​ளது.

நவம்​பர் 24-ம் தேதி கார்த்​திகை திருநாள் கொண்டாடப்பட உள்​ள​தால், உச்ச நீதி​மன்​றத்​தின் நவம்​பர் 20-ம் தேதி உத்​தர​வின் 13 முதல் 20 வரையி​லான பத்​தி​களுக்கு உடனடி தடை விதிக்க வேண்​டும். சீராய்வு மனுவை நீதி​மன்​றத்​தின் வழக்​க​மான விசா​ரணை அறை​யில் வாதிட அனுமதி அளிக்க வேண்​டும். இவ்​வாறு சீராய்வு மனுவில் கூறப்​பட்​டுள்​ளது.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வில் கூறப்​பட்​டிருந்​தது என்ன?

திருப்​பரங்​குன்​றம் மலை மீது உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வது தொடர்​பாக கடந்த 20-ம் தேதி உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் 13 முதல் 20 வரையி​லான பத்​தி​களில் கூறப்​பட்​டுள்ள விவரம்:

>> நவம்​பர் 24-ம் தேதி திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் ஒரு​முறை மட்​டும் கார்த்​திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்​கப்​படு​கிறது. கோயில் நிர்​வாகம் அங்​கீகரித்த குழு​வினர் மட்​டுமே தீபம் ஏற்ற வேண்​டும். இந்த அனுமதி எந்த பாரம்​பரிய, மத அல்​லது சொத்​துரிமையை அங்​கீகரிப்​ப​தாகாது.

>> மாவட்ட ஆட்சி​யர் ஒருங்​கிணைப்பு மற்​றும் மேற்​பார்வை அதி​காரியாகச் செயல்​பட வேண்​டும். மதுரை காவல் ஆணை​யர் பாது​காப்பு ஏற்​பாடுகளை மேற்​கொள்ள வேண்​டும். தேவைப்​பட்​டால் மத்​திய ரிசர்வ் காவல் படை உதவியைப் பெறலாம். பொது​மக்​கள், பக்​தர்​கள் தீபத்​தூணுக்​குச் செல்ல அனுமதி​யில்லை. முழக்​கங்​கள், ஆர்ப்​பாட்​டங்​கள் மற்​றும் பிற நிகழ்​வு​களுக்​கு அனுமதி கிடையாது. தொல்​லியல் சின்​னங்​களுக்கு எந்த சேதமும் ஏற்​படக் கூடாது. தர்கா உள்​ளிட்ட பிற மத வழிபாடுகளுக்​கும் எந்த இடையூறும் ஏற்​படுத்த கூடாது.

>> தீபத்​தூண் என்​பது பாரம்​பரிய​மாக வழிபாடு நடத்​தப்​பட்ட இடம் என்றோ, அங்கு தீபம் ஏற்​று​வது அத்​தி​யாவ​சி​ய​மான மத வழிபாடு என்றோ உச்ச நீதி​மன்​றம் எந்த முடிவுக்​கும் வர​வில்லை. தீபத்​தூணின் உரிமை, பாரம்​பரியம், மத உரிமை உள்​ளிட்ட விவகாரங்​கள் இறுதி விசா​ரணைக்கு உட்​பட்​டவை.

>> இந்த முறை தீபம் ஏற்​று​வதற்கு வழங்​கப்​பட்ட அனுமதி​யையோ, அதை செயல்​படுத்​து​வதையோ எதிர்​காலத்​தில் பாரம்​பரிய உரிமை, மத வழக்​கத்​தின் முன்​னுதா​ரணம் அல்​லது அந்த இடத்​துக்​குச் செல்​லும் உரிமைக்​கான ஆதா​ர​மாக யாரும் பயன்​படுத்த கூடாது. அடுத்த ஆண்​டுகளில் இதேபோன்ற அனுமதி​யைக் கோரு​வதற்​கும் இந்த உத்​தரவு அடிப்​படை​யாக அமையாது.

>> இந்த உத்​தரவு நவ.24-ம் தேதி நடை​பெறவுள்ள கார்த்​திகை தீபத் திரு​விழாவுக்கு மட்​டுமே பொருந்​தும். எதிர்​கால ஆண்​டுகளில் வழிபாடு நடத்​தும் முறை அல்​லது சம்​பந்​தப்​பட்ட தரப்​பினரின் உரிமை​களை இந்த உத்​தரவு தீர்​மானிக்​காது.

>> உத்​தரவைச் செயல்​படுத்​து​வதில் மதுரை மாவட்ட ஆட்சி​யர், காவல் ஆணை​யர், இந்​திய தொல்​லியல் துறை மற்​றும் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு, தீபம் ஏற்​றும் நிகழ்வு அமைதி​யாக நடை​பெறு​வதற்​கான ஏற்​பாடுகளைச் செய்ய வேண்​டும்.

>> சம்​பந்​தப்​பட்ட அனைவரும் அதி​காரி​களுக்கு முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். மத விழாக்​கள் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் கீழ் பரஸ்பர மரியாதை, பொது அமைதி மற்​றும் சட்​டத்​தின் ஆட்​சிக்கு உட்​பட்டு நடை​பெற வேண்​டும்.

>> தீபம் ஏற்​றும் நிகழ்வு நிறைவடைந்த 3 நாட்​களுக்​குள், உத்​தரவு முறை​யாகச் செயல்​படுத்​தப்​பட்​டது தொடர்​பான அறிக்​கையை மதுரை மாவட்ட ஆட்சி​யர் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு உச்ச நீதி​மன்ற உத்​தர​வில் தெரி​வி​க்கப்பட்டு இருந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT