புதுடெல்லி/சென்னை: திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்துச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். மேலும் தொல்லியல்துறையினர் அனுமதியோடு கோயில் நிர்வாகம் தரப்பினர் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வும் உறுதி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம், தமிழக அரசு, தர்கா நிர்வாகம் தரப்பிலும், அதேபோல தீபம் ஏற்ற பொதுமக்களை அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து ராம ரவிக்குமார் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகின்றது.
அதேவேளையில், இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு சார்பில் அதன் நிர்வாகி கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவில், திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் அதன் சுற்றியுள்ள மலைப்பகுதியை தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், 24 மணி நேரமும் கோயிலில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் மற்றும் கார்த்திகை திருநாளின்போது மலையைச் சுற்றி முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும் என கோரியிருந்தார், அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் முழு மலையின் உரிமை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கடந்த 1923-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின்படி மலையின் முழுமையான உரிமை கோவிலுக்குச் சொந்தமானது என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மலையில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் நெல்லித்தோப்பு தொடர்பான எல்லைகள் வழக்குகளின் மூலம் முறையாக அளவீடு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளன. கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகளின்படியும், கோயில் பரிந்துரைகளின்படியும், கோவில் பகுதிக்கு அருகில் உள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 1996-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கோயில் தேவஸ்தானம் மட்டுமே பாரம்பரியமான இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், வேறு எங்கும் தன்னிச்சையாகத் தீபம் ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் நிலவும் மத நல்லிணக்கச் சூழலைப் பாதுகாக்கவும், எந்தவிதமான வகுப்புவாத மோதல்களும் ஏற்படாமல் தடுத்துப் பொது அமைதியைக் காக்கவும் மாநில காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மட்டுமே முழுப் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றன.
கோவில் மற்றும் முழு மலையையும் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது.
திருப்பரங்குன்றம் கோயிலில் பூஜைகள் ஆராதனைகள் மற்றும் தீபம் ஏற்றும் அனைத்து உரிமையும் கோயில் நிர்வாகத்துக்கு உரியது, எனவே மனுதாரரின் கோரிக்கைகளை நிராகரித்து, மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.